காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை: தமிழ் பிரதிநிதிகளிடம் கனேடிய உயர்ஸ்தானிகர்
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கனேடிய அரசு தொடர்ந்தும் உறுதியாகச் செயலாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வந்ததாகவும், காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளதில்லை என்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு 11-11-2026 அன்று மணியளவில் கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் காத்திரமான பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிலைப்படுத்திய தற்போதைய அரசாங்கம், அதற்குரிய எந்த நகர்வுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை தோற்றுவித்திருப்பதாக இதன்போது தமிழ்ப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அதேபோன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக ஒட்டுமொத்த நாட்டுக்கும், குறிப்பாக சிறுபான்மையின மக்கள் முகங்கொடுக்கநேரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதிப்பொறிமுறை மற்றும் திட்டமிட்டுக் காலந்தாழ்த்தப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்கள் என்பவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பிவரும் நிலையில், இச்சட்டமூலங்களின் ஊடாக அந்தப் போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கும், தனிநபர்கள் இலக்குவைக்கப்படுவதற்குமான ஆபத்து இருப்பதாக உயர்ஸ்தானிகரிடம் தமிழ்ப்பிரதிநிதிகளால் கரிசனை வெளியிடப்பட்டது.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தெளிவாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், அதனை முற்றாக நீக்குவதற்கு பதிலாக, அரசாங்கம் அதனைப் பதிலீடு செய்யும் வகையில் ஆபத்தான சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தானது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
அவற்றை செவிமடுத்த உயர்ஸ்தானிகர், இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கனேடிய அரசு தொடர்ந்தும் உறுதியாகச் செயலாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு கடந்த காலங்களில் பயங்கரவாத்தடைச்சட்டம் பல்வேறு பெயர்களில் முன்மொழியப்பட்ட வேளைகளிலும் அவற்றை உன்னிப்பாக அவதானித்து வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையில் நிகழும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்கள் கனடாவிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அவற்றை கட்டுப்படுத்துவதற்காகத் தாம் இலங்கையோடு இணைந்து செயற்பட்டாலும்,காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை தாங்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தற்போது இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயலும் சட்டங்களை தொடர்பில் தாம் ஏற்கனவே அதன் பிரதிநிதிகளிடம் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வட, கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக தமிழ் மக்களின் முன்னேற்றம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கனேடிய அரசு முன்னெடுத்துவருவதாகவும், கனடாவில் வாழும் புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வட, கிழக்கு மாகாணங்களில் ஊக்குவித்து, அதனூடாகப் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர்ஸ்தானிகர் எடுத்துரைத்துள்ளார்.





