எரிபொருள் விலை நிர்ணயத்தில் சுயாதீன ஒழுங்குபடுத்தல் பொறிமுறை அவசியம் - பொது நிதிக்குழு
ஒட்டுமொத்தமான எரிபொருள் மானியங்களிலிருந்து விலகி, நிதி ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் பொது போக்குவரத்து துறைக்கு உதவிகளை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தையும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எரிபொருள் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு இடையே நியாயமான போட்டியைப் பேணுவதற்கும் சுயாதீன ஒழுங்குபடுத்தல் பொறிமுறையொன்று அவசியம் என்று பாராளுமன்றத்தின் பொது நிதிக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் பாராளுமன்ற நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதோடு, இலங்கை கனிமவளக் கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கும் இடையிலான எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் உள்ள வேறுபாடுகள் குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டன.
நாட்டின் எரிபொருள் தேவையின் ஒரு பகுதியைச் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உற்பத்தி செய்வதாகவும், தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தமக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் அனைத்தையும் இறக்குமதி செய்வதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் வெளிநாட்டு எரிபொருள் விநியோகஸ்தர்களால் ஏற்படும் இறக்குமதிச் செலவுகளுக்கு இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளதை குழு அடையாளம் கண்டதோடு தனியார் நிறுவனங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்படும் எரிபொருள் விலைகளின் அடிப்படையிலேயே தங்கள் விலைகளை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டது.
இது பெற்றோலிய சந்தையில் போட்டிச்சமநிலையின்மை மற்றும் எரிபொருள் விலையை ஒழுங்குபடுத்துவதற்கு வெளிப்படையான மற்றும் சுயாதீனமான பொறிமுறையின் தேவை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் சமமான களத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழு, தற்போதுள்ள எரிபொருள் விலைச் சூத்திரம், இறக்குமதிச் செலவுகள், வரிகள் மற்றும் விநியோகச் செலவுகள் குறித்தும் கவனம் செலுத்தியது.
ஒட்டுமொத்தமான எரிபொருள் மானியங்களிலிருந்து விலகி, நிதி ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் பொது போக்குவரத்து துறைக்கு உதவிகளை அறிமுகப்படுத்துவதன் அவசியத்தையும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இறக்குமதி செய்யப்படும் வாகனத் டயர்களுக்கான புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் இந்த கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





