மகா சங்கத்தினரை அரசு ஏமாற்றியுள்ளது - தித்தகல்லே தேரர்
இலங்கை அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க முடியாததென அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ள நிலையில், மகா சங்கத்தினருக்கு மன்னிப்பு அளிக்கப்படுமென தெரிவித்து நம்பிக்கையளித்துவிட்டு, தற்போது முடியாதெனக் கூறுவது ஏமாற்றமளிக்கும் செயல் எனவும், மன்னிப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென தித்தகல்லே தேரர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் 17-10-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தித்தகல்லே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது என்றும், அவ்வாறு மன்னிப்பு வழங்குவது அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணானது என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்திருக்க வேண்டும். மன்னிப்பு வழங்குவது தொடர்பில் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடிய பின்னர், தற்போது அதற்கு முடியாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மூன்றாவது கலந்துரையாடலின்போது, அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அதற்கான காலக்கெடு அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு மன்னிப்பு வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, பின்னர் அதற்கு முடியாது எனத் தெரிவிப்பதன் மூலம் மகா சங்கத்தினருக்கு அரசாங்கம் தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் லால் காந்தவின் கருத்து, அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகின்றது. மன்னிப்பு வழங்க முடியாது என்பதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக, கலந்துரையாடல்களில் மன்னிப்பு தொடர்பில் நம்பிக்கையளித்துவிட்டு, தற்போது அதற்கு இடமில்லை என்று கூறுவது மகா சங்கத்தினரை ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகும்.
இலங்கை அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். பௌத்த பிக்குகள் மட்டுமன்றி ஏனைய மதத் தலைவர்களும் பொதுமக்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து, ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் தெளிவான தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.





