கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
தொடர்ந்தும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதாகவும், ருவான்வெலிசாயவை வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டது.
அநுராதபுரம் ருவான்வெலிசாய விகாரையை அழிக்கும் அரசாங்கத்தின் போலி அபிவிருத்தித் திட்டத்தைத் தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் தேரர்கள் குழுவினர் அநுராதபுரத்தில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் போராட்டம் நடத்துவதற்கு எதிராக 14நாட்கள் தடை உத்தரவு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், தடை உத்தரவு அறிவிப்பை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களிடத்தில் கையளிப்பதற்காக வருகை தந்திருந்த பொலிஸாருடன் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து தேரர்களுக்கு ஆதரவளித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அநுராதபுரம் ருவான்வெலிசாய விகாரைக்கு அருகில் நேற்றையதினம் அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் மற்றும் சிவில் தரப்பினர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக வருகை தந்தவர்களையும் அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் முயற்சித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் முறுகல் நிலையை அடைந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தேரர்களின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களிடத்தில் அநுராதபுரம் நீதிவான நீதிபதி சம்பவ இடத்தில் பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவை வாசித்து காட்டினர். தொடர்ந்து பலாங்கொட கஸ்ஸப்ப தேரர், உதித நிஷாந்த ஆகியோருடன் இருந்த தேரர்கள் மற்றும் ஏனையோர் அமைத்த தற்காலிகக் கூடாரங்களை அகற்றியதோடு அவர்களை வெளியேறுமாறும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் நீதிவான் நீதிமன்றம் சென்ற பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு தெரியப்படுத்தப்பட்டுள்ளதோடு அங்கிருந்து அவர்களை அமைதியாக வெளியேறுமாறு அறிவித்தும் தொடர்ந்தும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதாகவும், ருவான்வெலிசாயவை வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் உள்ளிட்டவர்கள் ருவான்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீP மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதிகளிலிருந்து வெளியேறவும், தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் வெளியே வேண்டும் எனவும் நீதிமன்றத்தின் உத்தரவு அடுத்த 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் மீண்டும் உத்தரவு பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தேரர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





