சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம்
இன்றைய தினம் (நேற்று) மாலை 5.00 மணிக்கு நீதியமைச்சரை சந்தித்து, எமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் தூரநோக்கு சிந்தனையற்றது எனவும், அதனை முற்றாக எதிர்ப்பது எனவும் நாடளாவிய ரீதியில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் நேற்றைய தினம் (29) நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தம்முடன் கலந்துரையாடவேண்டும் என்றும், அதன் பின்னரும் இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்பினால் சர்வசன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களின் நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான யோசனைக்கு 27-07-2026 அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள பின்னணியில், இதுபற்றி ஆராயும் நோக்கில் விசேட சந்தர்ப்பங்களின்போது மாத்திரம் கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபை 29-07-2026 அன்று கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் கூடியது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சங்கத்தில் அங்கம் வகிக்கும் சுமார் 28,000 சட்டத்தரணிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேரடியாகவும், நிகழ்நிலை முறைமை ஊடாகவும் சுமார் 3500 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதுவரை நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்ட வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான சட்டத்தரணிகள் பங்கேற்ற கூட்டமாக இது பதிவாகியுள்ளது.
அதன்படி கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கூறியதாவது:
இன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் சகல உறுப்பினர்களதும் பங்கேற்புடனான கூட்டம் நடைபெற்றது. ஜனநாயக ரீதியில் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது குறித்து ஆராய்வதாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் நேரடியாகவும், நிகழ்நிலை முறைமை ஊடாகவும் சுமார் 3000 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இக்கூட்டத்தில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசாங்கத்தினால் மிக அவசரமாக முன்வைக்கப்பட்ட யோசனை குறித்துக் கலந்துரையாடப்பட்டது. சட்டத்துறை என்று சொல்லும்போது அதில் சட்டத்தரணிகள் மாத்திரமன்றி நீதிபதிகளும் உள்ளடங்குகின்றனர். ஏனெனில் அவர்களும் ஆரம்பத்தில் தமது பயணத்தை சட்டத்தரணிகளாகவே ஆரம்பித்தனர். அதேபோன்று நீதிபதிகளுக்கு நீதிமன்றங்களுக்கு வெளியே குரல் இல்லை என்பதனால், சம்பிரதாய ரீதியாக சட்டத்தரணிகள் சங்கமே அவர்களது குரலாக இருந்து, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒருவர் கூட மிச்சமின்றி சகல சட்டத்தரணிகளும் தூரநோக்கு சிந்தனையின்றி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு தொடர்பான தீர்மானத்தை எதிர்க்கிறோம். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் இக்கூட்டத்தில் நேரடியாகவும், நிகழ்நிலை முறையிலும் கலந்துகொண்டிருந்த சகல சட்டத்தரணிகளிடமும் 'அரசாங்கத்தின் யோசனைக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனையை யார் ஆதரிக்கிறீர்கள்?' என்று நான் கேட்டேன். அதற்கு சகலரும் கை உயர்த்தினார்கள். அனைவரது கருத்தும் உள்வாங்கப்படவேண்டும் என்பதனால், 'அதனை யார் எதிர்க்கிறீர்கள்?' என்றும் கேட்டேன். அதற்கு ஒருவர் கூட கை உயர்த்தவில்லை.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் முட்டாள்தனமானதாகும். எனவே இதனுடன் தொடர்புடைய சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். இத்தீர்மானம் நீதிமன்ற சுயாதீனத்துவத்தின் மீதான பாரதூரமான தாக்குதலாகும். இப்போது இதுபற்றிக் கலந்துரையாடியிருக்கும் நாம், எதிர்வருங்காலங்களில் மேலும் துடிப்புடனும் உத்வேகத்துடனும் பேசுவோம். அரசாங்கத்தின் இச்செயற்பாடு முற்றிலும் தவறானது என்றும், கொள்கை கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எம்மிடம் கூறுகிறார்கள். உண்மையில் இது ஒரு குற்றமாகும். ஊழலாகும். எனவே இதனைத் தடுக்கவேண்டும்.
நீதிமன்ற சுயாதீனத்துவத்தின் மீதான அச்சுறுத்தலால் ஏற்படக்கூடிய விளைவுகள் இன்றும், நாளையும் மாத்திரம் ஏற்படக்கூடியவை அல்ல. மாறாக அது ஒரு நீண்டகாலப் பிரச்சினையாகும். இந்த முறையற்ற தீர்மானத்தின் விளைவாக உயர்நீதிமன்ற நீதியரசர்களும் அசௌகரியத்துக்கு உள்ளாக நேரிடும். ஏனெனில் பொதுவாக சட்டமூலமொன்றின் சட்டபூர்வத்தன்மை மற்றும் ஏற்புடைய தன்மை என்பன உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். அவ்வாறிருக்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதன் விளைவாக உயர்நீதிமன்ற நீதியரசர்களும் நன்மையடைவார்கள் என்பதனால், இச்சட்டமூலம் குறித்து தீர்மானம் மேற்கொள்கையில் அவர்களும் அசௌகரியத்துக்கு உள்ளாக நேரிடும்.
ஆகவே இவ்விடயத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்காமல், இதுபற்றி அரசாங்கம் எம்முடன் கலந்துரையாடுவதற்கு தற்போதும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னரும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அரசாங்கம் விரும்பினால், சர்வசன வாக்கெடுப்பை நடத்தமுடியும்.
இந்த யோசனையை நடைமுறைப்படுத்தவேண்டாம் என்று நாம் சுமார் இரு மாதகாலமாகக் கூறிவருகிறோம். இருப்பினும் எமது நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவாகவும், தர்க்க ரீதியாகவும் எடுத்துரைப்பதற்கு அரசாங்கம் எமக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. எமது நிலைப்பாட்டைக் கோராமல், அமைச்சரவைத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும் இன்றைய தினம் (நேற்று) மாலை 5.00 மணிக்கு நீதியமைச்சரை சந்தித்து, எமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கமைய அவரைச் சந்திப்போம்.
அது எமது பொறுப்பாகும். நாட்டின் சட்டத்துறையையும், மக்களின் நலனையும் கருத்திற்கொண்டே நாம் இதனைச் செய்கிறோம். அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படவில்லை என்பதனால், இன்றைய (நேற்றைய) தினம் சந்திப்புக்குச் செல்லவேண்டுமா என்ற கேள்வி சிலரிடம் இருந்தது. இருப்பினும் எம்மை ஓரங்கட்டி, புறக்கணித்துச் செல்ல முயன்றாலும், இவ்விடயத்தில் நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். நீதியமைச்சரும் எமது சங்கத்தின் உறுப்பினராவார். அவர் அமைச்சராகாமல், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகியிருந்தால் இவ்விடயத்தில் எம்மை விட அதிகமாகக் குரலெழுப்பியிருப்பார் என்றார்.





