'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் விபத்து தொடர்பான வழக்கில் பாரிய சந்தேகங்கள் - தயாசிறி
'எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீட்டு ஆணையம்' அமைக்கப்பட்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் காமினி அமரேகரவின் தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையின் கடல் வளத்துக்கும் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க பேரிடரை ஏற்படுத்திய 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் விபத்து தொடர்பான வழக்கில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியால் ஏற்பாடு .செய்யப்பட்டு, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் கடற்பரப்பில் இடம்பெற்ற 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் விபத்தானது, நாட்டின் வரலாற்றிலேயே மிக கடுமையான கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவாகக் கருதப்படுகிறது. இந்த விபத்தினால் பெருமளவிலான நச்சு இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் கடலில் கலந்ததோடு, சுமார் 19,000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டது. இவ்விவகாரம் குறித்து முன்னாள் பிரதம நீதியரசர் முருது பெர்னாண்டோ தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு, நான்கு ஆண்டுகள் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பின் அடிப்படையில், பில்லியன் கணக்கான டொலர் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக 'எக்ஸ்பிரஸ் பேர்ள் இழப்பீட்டு ஆணையம்' அமைக்கப்பட்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் காமினி அமரேகரவின் தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளைத் தாண்டி, சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இழப்பீட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக, வழக்குத் தொடர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மர்மமான நகர்வுகள் இடம்பெற்றுள்ளதோடு, இந்த விவகாரத்தில் லண்டனைச் சேர்ந்த பி அண்ட் ஐ கிளப் (P&I Club) மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் ஜனாதிபதி மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து கடிதங்களை அனுப்பியுள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, இவ்வாறான நிறுவனங்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பேசி வழக்கை மாற்றியமைக்க முயல்வது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கப்படும் நேரடித் தாக்கமாகும்.
பாதிக்கப்பட்ட எந்தத் தரப்பினருக்கும் தெரியாமல், சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கிடைக்க வேண்டிய டொலர் வருமானம், அதிகாரிகளின் தவறான முடிவுகளால் கைநழுவிப் போவது ஒரு பகல் கொள்ளையாகும். இந்த வழக்கு ஏன் நிறுத்தப்பட்டது? யாருடைய அறிவுறுத்தலின் பேரில் சட்டமா அதிபர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்? போன்ற கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே, இந்த விடயத்தில் சட்டமா அதிபர் மற்றும் ஜனாதிபதி உரிய விளக்கமளிக்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காகக் கத்தோலிக்க திருச்சபையின் தலையீடும் அவசியமானது என்றார்.





