மக்கள் தீர்மானித்தால் வீடு செல்லத் தயார்: பிரதமர் கலாநிதி ஹரிணி
பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் வீடு செல்ல தயாராகவுள்ளேன்.
கல்வி தொடர்பில் சிறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையான கலந்துரையாடல் அவசியம், அதற்கு முதலில் புதிய கல்வி மறுசீரமைப்பு திட்ட உள்ளடக்கத்தை முறையாக ஆராய வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பின் இலக்கு தொடர்பில் முழுமையாக ஆராயாமல் எதிர்க்கட்சித் தலைவர் அங்கொன்றும், இங்கொன்றுமாக பல விடயங்களை பட்டியலிட்டுள்ளார். அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு கல்வி கொள்கை தொடர்பில் வெளிப்படையாக விவாதிக்க முடியாது. நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வர தேவையில்லை. பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் வீடு செல்ல தயாராகவுள்ளேன்.நாட்டு மக்களுக்கும், மனசாட்சிக்கும் நான் பொறுப்புக்கூறுகிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-01-2026 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவோ அல்லது ஜனநாயகத்துக்கு எதிரானதாகவோ கொண்டு வரப்படவில்லை. பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இச்சட்டமூலம் உருவாக்கப்பட்டது.
சட்டத்தை திருத்தம் செய்வதால் பல்கலைக்கழக கட்டமைப்பு அரசியல்மயமாக்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் எவ்வாறு அரசியல்மயமாக்கப்படும் என்று இவர்கள் குறிப்பிடுவதில்லை. வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள்.1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின் ஒருசில விடயங்கள் தற்போதைய நிலைமைக்கு பொருத்தமற்றதாகவும், முரண்பட்டதாகவும் காணப்படுகிறது. இதனை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மாற்றியமைப்பதில் என்ன பிரச்சினை காணப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை பற்றி பல விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைக்கிறார்கள். உத்தேச கல்வி மறுசீரமைப்பின் உள்ளடக்கத்தை முழுமையாக பரிசீலனை செய்து விட்டு, அரசியல் நோக்கத்தை விடுத்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்குமாறு எதிர்கட்சியினரிடம் கேட்டுக்கொள்கிறேன்.உள்ளடக்கத்தை முழுமையாக பரிசீலிக்காமல் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட முடியாது.
கல்வி தொடர்பில் சிறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையான கலந்துரையாடல் அவசியம், அதற்கு முதலில் உள்ளடக்கத்தை முறையாக ஆராய வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பின் இலக்கு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அங்கொன்றும், இங்கொன்றுமாக பல விடயங்களை பட்டியலிட்டுள்ளார்.புதிய மறுசீரமைப்புக்கு அமைவாகவே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நடைமுறை உலகுக்கு பொருந்தும் வகையில் தான் கல்வி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச சவால்களுக்கு இளம் தலைமுறையினர் முகங்கொடுக்க வேண்டும்.எவ்வாறு கற்க வேண்டும் என்பதை முதலில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 6 ஆம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை மாணவர்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை கற்பிக்க வேண்டும்.முழுமையான உள்ளடக்கத்தை பரிசீலிக்காமல் வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே எதிர்க்கட்சியினர் முன்வைக்கிறார்கள். முதலில் விடயங்களை கற்றுக்கொள்ளுங்கள் பிறகு வெளிப்படையாக விவாதத்தில் ஈடுபடலாம்.
நடைமுறை உலகில் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் திறன் நாளுக்கு நாள் விருத்தியடைகிறது. அதற்கமையாகவே கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மனனம் செய்வது மாத்திரம் கல்வி அல்ல என்பதை மாணவர்களுக்கு குறிப்பிட வேண்டும். பரீட்சையை மாத்திரம் இலக்காகக் கொண்டு மாணவர்கள் கற்க கூடாது.
ஆறாம் தர பாடப்புத்தகத்தில் ஒரு தொகுதியில் தவறு நேர்ந்துள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை திருத்திக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். பொறுப்பில் இருந்து நாங்கள் விலகவில்லை. இதனை பிடித்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள். எதையாவது பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தலாமா என்றே பார்க்கிறார்கள்.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது கொண்டு வருகின்றீர்கள். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகவே இன்று பாராளுமன்றத்துக்கு வந்தேன். தயாராகவே உள்ளேன். நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வர தேவையில்லை. பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் வீடு செல்ல தயாராகவுள்ளேன்.நாட்டு மக்களுக்கும், மனசாட்சிக்கும் நான் பொறுப்புக்கூறுகிறேன்.முதலில் கல்வி மறுசீரமைப்பை முழுமையாக ஆராயுங்கள் பின்னர் வெளிப்படையாக விவாதிக்கலாம்.அதனை விடுத்து அரைகுறையாக படித்து விட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது முறையற்றது என்றார்.





