அரசாங்கம் பணம் அச்சிடவில்லை: பிரதி அமைச்சர் அனில் பெர்ணான்டோ
பாராளுமன்றத்தில் 19-08-2025அன்று இடம்பெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் பணம் அச்சிடுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையில் பணம் அச்சிடுவதற்கு அரசாங்கத்துக்கு இயலுமை இல்லை. சட்ட ரீதியில் அதற்கு அனுமதி இல்லை என நிதி பிரதி அமைச்சர் அனில் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 19-08-2025அன்று இடம்பெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் மிகவும் சிரமத்துடன் செயற்பட்டு வருகிறோம். அதனால் இந்த நடவடிக்கைக்காக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் நாங்கள் ஒரே சந்தர்ப்பதில் இரண்டு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறோம். அதாவது நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் எமது பொருளாதாரத்தை விரிவாக்குவதற்கு போதுமான முதலீடுகளை கொண்டுவர வேண்டி இருக்கிறது. முதலீட்டாளர்களை அழைத்து வருவதே மிகவும் முக்கியமானதாகும். அதேபோன்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஸ்திரப்படுத்துவது முக்கியமாகும்.
இதனை நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியிலும் ஸ்திரப்படுத்தி வரும்போது, எங்களுக்கு நாட்டுக்குள் இருந்து, எதிர்க்கட்சியில் தெரிவுசெய்யப்பட்ட சில குழுக்கள் அரசியல் நோக்கில் திட்டமிட்டோ அல்லது வேறு காரணங்களுக்காக இந்த ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்களை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அரசாங்கம் பாரியளவில் பணம் அச்சிடப்போவதாக சமூகத்தில் பீதியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன. இவர்கள் இதனை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர். அல்லது புரியாமல் மேற்கொள்கின்றனர். எமது அரசாங்கத்தினால் 1200 பில்லியன் பணம் அச்சிட்டுள்ளதாக ஒரு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அரசாங்கத்தின் தற்போதைய நிலைமையில் பணம் அச்சிடுவதற்கு அரசாங்கத்துக்கு இயலுமை இல்லை. சட்ட ரீதியில் அதற்கு அனுமதி இல்லை.அதனால் நாங்கள் பணம் அச்சிடுவதில்லை. அதேநேரம் பணம் அச்சிடுவதென்றால் நாணய தாழ்களை அச்சிட்டு சந்தைக்கு விநியோகிப்பது என்றே சிலர் நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. இங்கு பணம் அச்சிடுவது என்பதன் அர்த்தம், சந்தைக்கு பணத்தை விரிவாக்குவதாகும். நாட்டில் இருக்கும் கையிருப்பு பணத்தை மத்திய வங்கியே நிர்வகித்து வருகிறது. அரசாங்கம் எந்தவகையிலும் நிதி விநியோகத்தை அதிகரித்ததில்லை. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு தொகை மற்றும் அரசாங்கத்திடம் இருக்கும் பணத்தொகையை மத்திய வங்கியின் இணையத்தலத்தில் வாராந்தம் வெளியிடப்படுகிறது. பிழையான தகவல் தெரிவிப்பவர்கள் இதுதொடர்பில் அறிந்துகொள்ளலாம்.
எனவே அரசாங்கம் பணம் அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தெரிவிக்கப்படும் செய்தியாகும். நாட்டில் வெளிநாட்டு கையிருப்பாக 1.6 ரில்லியன் இருப்பதுடன் விரிவான நிதி விநியோகம் 15 ரில்லியன் வரை இருக்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் விரிவான நிதி அபிவிருத்தியில் ஓரளவு அதிகரிப்பு காணப்படுகிறது.அதாவது மத்திய வங்கியின் செயற்பாடுகளின் மூலமே அது இடம்பெற்றிருக்கிறதே தவிர, அரசாங்க்ததின் நடவடிக்கையால் அல்ல. அதாவது அரசாங்கம் பணம் அச்சிடவில்லை என்பது தெளிவாகிறது.
அத்துடன் பொருளாதார ஸ்திரத்ததன்மையை ஏற்படுத்தும்போது உள்நாட்டு சவால்களுடன் வெளிநாட்டு சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் தீர்வை வரி தொடர்பில் அரசாங்கத்தின் குழுவொன்று அதுதொடர்பில் கலந்துரையாடலுக்கு சென்றிருந்தது. அதன்போது ஒருசிலர் எமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். அதாவது, நாங்கள் கலந்துரையாடலைசரியான முறையில் மேற்கொள்ளவி்ல்லை, சரியான உறுப்பினர்களுடன் கலந்துரையாடவில்லை என பல்வேறு விடயங்களை தெரிவித்து வந்தனர்.இவ்வாறு எமது நடவடிக்கைகளை குழப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் அதற்கு நாங்கள் சிக்கிக்கொள்ளாமல் எமது நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு சென்று எமக்கு விதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு 44வீத வரியை நூற்றுக்கு 20 வீதம் வரை குறைத்துக்கொள்ள முடியுமாகி இருக்கிறது.இதனை நாங்கள் பெரும் வெற்றியாகவே பார்க்கிறோம்.
அதேநேரம் இந்த அமெரிக்க வரி அதிகரிப்பு தொடர்பில் இந்தியா உள்ளிட் வேறு நாடுகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, எம்மை விமரிசித்தனர். ஆனால் நாங்கள் எமது நடவடிக்கைகளை சரியான முறையில் செய்ததால், எமக்கு அமெரிக்க தீர்வை வரியை குறிப்பிடத்தக்களவு குறைத்துக்கொள்ள முடியுமாக இருக்கிறது. அதேநேரம் இந்தியாவுடன் நாங்கள் சிற்ந்த ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அமெரிக்காவின் வரி தொடர்பில் இந்தியாவுக்கு ஏற்பட்ட விடயம் தொடர்பில் நாங்கள் ஒருபோதும் இந்தியாவை பார்த்து சிரிக்கவில்லை. எதிர்க்கட்சியினரே தங்களின் தவறை மறைப்பதற்கு இவ்வாறான பொய் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டனர். அதனால் தவறான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





