பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றம் செல்வார்களா? நுவன் போபகே
நீதியமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவில் 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது.
நீதியமைச்சினால் பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தற்போது உயர்நீதிமன்றம் செல்வார்களா என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் உள்ள மக்கள் போராட்ட அமைப்பின் காரியாலயத்தில் 21-12-2025அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துக் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டே ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அதனை மறந்து விடுவார்கள்.
2023 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது. நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் பாரதூரமானதாக காணப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
நீதியமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவில் 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதனையே கொண்டு வருவது முறையற்றது. ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பேயின் பற்கள் நல்லதாக இருக்காது என்பதை அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.இந்த சட்டவரைவுக்கு எதிராக பிரதமர் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் உயர்நீதிமன்றம் செல்வார்களா, எதிர்ப்பை வெளிப்படுத்துவார்களா என கேள்வியெழுப்பினார்.





