பிமல் ரத்நாயக்க, சீவலி அருட்கொட கைது செய்யப்பட வேண்டும்: தயாசிறி
ரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு குறிப்பிட்ட விடயங்களுக்காக நானும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளித்துள்ளோம்.

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.அந்த அறிக்கையில் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை முறையற்ற செயற்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி அருட்கொட ஆகியோரை கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தகவலறியும் உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விபரங்களை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 2008 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டன.
2004 முதல் 2008 வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை. 2004-2008 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியின் 39 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினார்கள்.இவர்களும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளார்கள். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 2004-2008 வருட காலத்தின் விபரங்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தவில்லை.அவ்வாறாயின் இதில் ஏதேனும் முறைகேடு இடம்பெற்றுள்ளது என்ற சந்தேகம் காணப்படுகிறது.
2004-2008 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டவர்களின் விபரங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு கடந்த 05 மாதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.ஆனால் இதுவரையில் எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை.
சுயாதீன தகவலறியும் ஆணைக்குழுவை மரணபடுக்கைக்கு கொண்டு செல்லவே அரசாங்கம் முயற்சிக்கிறது. தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவர் பதவி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெற்றிடமாகியுள்ளது.அத்துடன் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையிலும் உறுப்பினர் பற்றாக்குறை காணப்படுகிறது.
இந்த அரசாங்கம் தகவலறியும் உரிமைச் சட்டத்தை வலுவற்றதாக்குவதற்கு முயற்சிக்கிறது. சுயாதீன தகவலறியும் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மலினப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. அரச நிறுவனங்களில் தகவல் கோரப்படும் பட்சத்தில் அவை மறுக்கப்படுகின்றன.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு குறிப்பிட்ட விடயங்களுக்காக நானும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளித்துள்ளோம்.
இந்த கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.அந்த அறிக்கையில் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை முறையற்ற செயற்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறாயின் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி அருட்கொட ஆகியோரை கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை விசாரிக்காமல், குற்றத்தை வெளிக்கொண்டு வந்தவர்களை விசாரிப்பது சட்டத்துக்கு முரணானது என்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.