தபால் துறையினரின் போராட்டம் தொடருகிறது
மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இவ்வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தபால் தொழிற்சங்கங்களினால் 6 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் பொது மக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தபால் உத்தியோகத்தர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மேலதிக வேலை நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இவ்வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய தேசிய தபால் சேவை சங்கம், இலங்கை சுதந்திர தபால் மற்றும் தொலை தொடர்பாடல் சேவை சங்கம், ஐக்கிய தபால் மற்றும் மின் தபால் பரிமாற்ற சேவை சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திர தபால் சேவை சங்கம், ஸ்ரீலங்கா தபால் சேவை முன்னணி உள்ளிட்ட 23 தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் 21-08-2025 அன்றைய தினமும் மத்திய தபால் பரிமாற்ற சேவை மூடப்பட்டிருந்தது. பதுளை, காலி, அநுராதபுரம், குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதான தபாலகங்களின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி தபால் மா அதிபர் சமிஷா டி சில்வா, இந்த வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பொது மக்கள் மாத்திரமின்றி முழு தபால் சேவையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
எனவே இதுவரை பணிக்கு சமூகமளிக்காதோர் இன்றாவது பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வாறில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாட்களில் சுமார் 100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள், பொதிகளும் தேங்கியுள்ளன. அவை தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலுள்ளது எனவே கூடிய விரைவில் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
எவ்வாறிருப்பினும் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை மறைத்து கைவிரல் ரேகைப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுக்காகவும் மாத்திரமே நாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரசாங்கம் மக்கள் மத்தியில் தவறான கருத்தினைப் பரப்புவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. எவ்வாறிருப்பினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தத்தைக் கைவிடப் போவதில்லை தொழிற்சங்கங்களும் ஸ்திரமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





