இலங்கையில் அரசியல் உரிமைகள், சிவில் சுதந்திரம்குறிப்பிடத்தக்க முன்னேற்றம் - 'ப்ரீடம் ஹவுஸ்' அறிக்கையில் தெரிவிப்பு
இலங்கை இன்னும் 'பகுதி சுதந்திரம்' கொண்ட நாடுகள் என்ற பட்டியலிலேயே நீடித்தாலும், அது அளவிடக்கூடிய நல்லதொரு முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
உலக அளவில் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து 20ஆவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்து வரும் நிலையிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கையில் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக 'ப்ரீடம் ஹவுஸ்' (Freedom House) அமைப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ப்ரீடம் ஹவுஸ் அமைப்பு, தனது 'உலகில் சுதந்திரம் 2026' என்ற வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை தனது புள்ளிகளில் 5 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள், ஊழலுக்கு எதிராகப் புதிய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் மத சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் ஆகியவையே இலங்கையின் இந்த நேர்மறை மாற்றத்திற்குக் காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 54 நாடுகள் தமது சுதந்திரத்தில் சரிவைச் சந்தித்துள்ள வேளையில், 35 நாடுகள் மாத்திரமே முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. அவற்றில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்ட நாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் சிரியா, இலங்கை, பொலிவியா மற்றும் காபோன் ஆகிய நாடுகளே மிக அதிகளவில் முன்னேற்றம் கண்ட நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் பல்வேறு மோதல்கள், இராணுவ புரட்சிகள், ஜனநாயகக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்படுதல் மற்றும் அதிகரித்து வரும் சர்வாதிகாரப் போக்கு போன்றவற்றால் உலகளாவிய ஜனநாயகம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையிலேயே, இலங்கையின் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ப்ரீடம் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னேற்றமடைந்திருந்தாலும், கினியா-பிசாவு, தான்சானியா, புர்கினா பாசோ, மடகாஸ்கர் மற்றும் எல் சல்வடோர் உள்ளிட்ட பல நாடுகளில் நிலைமை மோசமடைந்துள்ளதால், உலகளாவிய சுதந்திரம் தொடர்ந்து 20ஆவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பொலிவியா, பிஜி மற்றும் மலாவி ஆகிய மூன்று நாடுகள் 'பகுதி சுதந்திரம்' கொண்ட நாடுகள் என்ற நிலையிலிருந்து 'முழு சுதந்திரம்' கொண்ட நாடுகள் என்ற நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இலங்கை இன்னும் 'பகுதி சுதந்திரம்' கொண்ட நாடுகள் என்ற பட்டியலிலேயே நீடித்தாலும், அது அளவிடக்கூடிய நல்லதொரு முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலையைத் தொடர்ந்து, இலங்கை தொடர்ச்சியான ஜனநாயக மீட்சியை நோக்கிச் செல்வதையே இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கிறது. உலகளாவிய ரீதியில் ஜனநாயகம் பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் இத்தகைய ஜனநாயக மீள்தன்மை மிக முக்கியமானது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.





