ஆட்சியைப் பிடிக்கப் போகின்றோம் - மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இம்முறை மே தினம் போயா தினத்தில் வருவதால், தமது கட்சி மே தினக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஆன்மீக மற்றும் மதக் காரியங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சித்திரை புத்தாண்டின் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தின் பணிகள் 20-04-2026 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனக்குப் புத்தாண்டு வெற்றிகரமாக அமைந்திருந்தாலும், நாட்டின் மக்கள் இம்முறை புத்தாண்டை முறையாகக் கொண்டாடுவதற்கு வசதி வாய்ப்புகள் இருக்கவில்லை என கவலை வெளியிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பொதுமக்களிடையே புத்தாண்டு தொடர்பான உற்சாகமோ அல்லது உண்மையான புத்தாண்டு உணர்வோ காணப்படவில்லை.
மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இம்முறை புத்தாண்டை எதிர்கொண்டனர் என்றார்.





