அரசாங்கத்துக்கு பேரின, நுண்பொருளாதார முகாமைத்துவம் குறித்து புரிதல் இல்லை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
தற்போதைய அரசாங்கம் இவர்களது வாழ்வாதாரத்தையோ அல்லது தொழில்முயற்சிகளையோ கண்டுகொள்ளாமல் நுண்பொருளாதார முகாமைத்துவத்தை முற்றாக கைவிட்டுள்ளது.
அரசாங்கத்திற்குப் பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதாரம் ஆகிய இரு பரிமாண முகாமைத்துவங்கள் குறித்தும் எவ்விதப் புரிதலும் இல்லை. நாட்டில் இன்று இந்த இரு பொருளாதாரக் கொள்கைகளும் முறையாக முன்னெடுக்கப்படாததால், ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பும் முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரோடு தற்போதைய பொருளாதார நிலையால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 26-05-2026அன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம் மற்றும் நுண்பொருளாதாரம் என்று இரண்டு பிரதான பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை இரண்டில் எதுவும் தற்போதைய அரசாங்கத்தால் முறையாக முன்னெடுக்கப்பட்டபாடில்லை.
பேரினப் பொருளாதாரம் என்பது நாட்டின் வேலையில்லாப் பிரச்சினையின் விகிதம், பணவீக்கம், வர்த்தகச் சமநிலை, கொடுப்பனவுச் சமநிலை, பொருளாதார வளர்ச்சி வேகம், வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகிய அதிமுக்கிய காரணிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், பேரினப் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பது குறித்து இன்று மக்கள் மத்தியில் அடுக்கடுக்கான பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.
அதேபோன்று, பேரினப் பொருளாதாரத்தைப் போலவே நுண்பொருளாதார முகாமைத்துவத்தையும் இந்த அரசாங்கம் முற்றிலும் புறக்கணித்துள்ளது. தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்யும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் அனைவரும் இந்த நுண்பொருளாதாரக் கட்டமைப்புக்குள்ளேயே அடங்குவர். இவர்களே உழைப்பின் மூலம் நாட்டிற்குச் செல்வத்தை உருவாக்குகின்ற பிரதான சக்திகளாக விளங்குகின்றனர். எனினும், தற்போதைய அரசாங்கம் இவர்களது வாழ்வாதாரத்தையோ அல்லது தொழில்முயற்சிகளையோ கண்டுகொள்ளாமல் நுண்பொருளாதார முகாமைத்துவத்தை முற்றாக கைவிட்டுள்ளது.
எனவே, தற்போது நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான பிரச்சினைகளைக் கையாள்வதற்கும், பொருளாதாரத்தை மீண்டும் சீரான பாதைக்குக் கொண்டு வருவதற்கும் பேரின மற்றும் நுண் பொருளாதார முகாமைத்துவம் குறித்து அரசாங்கம் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டும். இதுதொடர்பான குறைபாடுகள் மற்றும் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது, நாட்டு மக்களின் சார்பாக மீண்டும் ஒருமுறை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக முன்வைத்து விவாதிக்கவுள்ளோம் என்றார்.





