அமைச்சின் செயலாளர் சிறை உடைக்கு தயாராக வேண்டும்: மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம்
தரமற்ற நிலக்கரியால் நுரைச்சோலை பகுதி மக்கள் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் நிலக்கரி கொள்முதல் நடவடிக்கைகளில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் மின்சார சபைக்கும் மக்களுக்கும் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் காரியாலயத்தில் 14-02-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் காலக்கெடு குறைப்பு தற்போதைய நிலக்கரி கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. வழக்கமாக விலைமனு கோரப்படும் போது வழங்கப்படும் 42 நாட்கள் கால அவகாசத்தை இந்த மோசடிக்கு வழிவகுக்கும் வகையில் 21 நாட்களாக குறைத்துள்ளனர்.
அத்துடன் விலைமனு வைப்புத் தொகையான ஒரு மில்லியன் டொலரை ஒரு இலட்சம் டொலராக குறைத்து தங்களுக்கு நெருக்கமான புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் காய் நகர்த்தியுள்ளது. இது தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து கமிஷன் பெறுவதற்கான ஒரு திட்டமிட்ட சதி.
தணிக்கையாளர் நாயகத்தின் ஆலோசனைகளை மீறி மோசடி அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்கள் எதிர்காலத்தில் சிறை உடை அணியத் தயாராக இருக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடர்வோம்.
நிலக்கரி கப்பல்களின் வருகையில் முதல் நான்கு கப்பல்கள் மூலம் மாத்திரம் சுமார் 808 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இலாபம் என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான நிலக்கரியின் அளவு தரமற்ற நிலக்கரியினால் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தித் திறன் குறைந்து செலவு அதிகரித்துள்ளது.
தரமற்ற நிலக்கரியால் நுரைச்சோலை பகுதி மக்கள் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதற்கான நட்டஈடு மின்சார சபையின் கணக்கில் சேரக் கூடாது அது பாதிக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதேபோல் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவானது வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்காமல், மின் உற்பத்தி நிபந்தனைகளை மீறும் தரப்பினருக்கு எதிராக உடனடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.
இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொண்டாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒரு அரசியல் குழுவாக அல்லாமல் ஒரு வியாபாரக் கும்பல் போலவே அமைகின்றது. பொதுமக்களின் பணத்தைச் சுரண்டி தங்களின் சொகுசு வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ளவே இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.





