இந்திய உயர்ஸ்தானிகருக்கு மனோகணேசன் அவசர கடிதம்
இத்தகைய விளைவுகள், இந்திய அரசின் உதவிக்கு அடித்தளமாக இருந்த நல்லிணக்கம், சமத்துவ நோக்கங்கள் மற்றும் நெறிமுறைச் சிந்தனைகளுக்கு முரணானதாக இருக்கும்.
தோட்டத்துறைக்கான இந்திய வீட்டுத்திட்டத்தினை இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்குள் உள்ளீர்த்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதற்கு எந்தவிதமான அனுமதிகளையும் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்வதோடு தோட்டத் துறைக்கான இந்திய வீடமைப்பு திட்டம் அதன் ஆரம்ப நோக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.
‘தோட்டத் துறைக்கான இந்திய வீடமைப்பு திட்டம் அதன் ஆரம்ப நோக்கத்தை பாதுகாக்க வேண்டும்’ எனும் தலைப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அக்கடித்தின் உள்ளடக்கம் வருமாறு:
தோட்டத் துறைக்காக செயல்படுத்தப்படும் 14,000 வீடுகள் கொண்ட இந்திய வீடமைப்பு திட்டம், ஒவ்வொரு தனி வீடும் சுமார் 2.8 மில்லியன் இலங்கை ரூபா மதிப்பீட்டில் அமைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு, தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர் (IOT) சமூகத்தின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான நல்லிணக்கத் திட்டங்களில் ஒன்றாகும். அதன் நோக்கம், வரம்பு மற்றும் இலக்குவாய்ந்த வடிவமைப்பு ஆகியவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆழ்ந்த பாராட்டைப் பெற்றுள்ளன.
எனினும், விளக்கத்திற்கு உட்பட்ட வகையில், இத்திட்டம் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ, தோட்ட மாவட்டங்களில் “தித்வா” மறுகட்டமைப்பு செயல்முறைக்குள் மாற்றப்படக்கூடும் என்ற சாத்தியத்தை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம்.
தாங்கள் அறிந்திருப்பதுபோல், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தில் வீடமைப்பு திட்டத்தை நாளை (இன்று) உத்தியோகபூர்வமாக அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த தேசிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டு அலகிற்கும் சுமார் 5 மில்லியன் இலங்கை ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய வம்சாவளி தமிழர் சமூகத்தையும் உட்பட, பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இச் சூழலில், இந்திய வீடமைப்பு திட்டத்தை “இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் செயற்றிட்டம்” என்ற பரந்த கட்டமைப்புக்குள் இணைப்பதோ, மறுசீரமைப்பதோ, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் தித்வா பாதிப்புக்குள்ளான இந்திய வம்சாவளி தமிழர் சமூகங்களுக்கு எதிராக மறைமுகப் பாகுபாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என்பதை தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வலியுறுத்த வேண்டியுள்ளது. இத்தகைய விளைவுகள், இந்திய அரசின் உதவிக்கு அடித்தளமாக இருந்த நல்லிணக்கம், சமத்துவ நோக்கங்கள் மற்றும் நெறிமுறைச் சிந்தனைகளுக்கு முரணானதாக இருக்கும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி , பேரழிவுக்குப் பிந்தைய வீடமைப்பு அல்லது அபிவிருத்தி வளங்களை ஒதுக்குவதில், இலங்கை அரசால் எங்கள் மக்களுக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு பாகுபாடையும் ஏற்காது. அது போன்ற விடயங்களில் மௌனம் காக்கவும் மாட்டாது.
ஆகையால், தோட்ட வீடமைப்பு திட்டம் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்றிட்ட முயற்சிக்குள் உட்சேர்க்கப்படுவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்காமல் இருக்குமாறு, மரியாதையுடனும் உறுதியுடனும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இத்திட்டம் அதன் ஆரம்ப பாதையிலேயே தொடரப்பட வேண்டும் என்றும், அதன் முழுமை, அளவு மற்றும் தோட்ட சமூகங்களுக்கான தனிப்பட்ட கவனம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அணுகுமுறை, திட்டத்தின் நல்லிணக்க மதிப்பை பாதுகாப்பதோடு, எதிர்பாராத சமத்துவமற்ற நிலைகளை தவிர்க்கவும், நீதியும் உள்ளடக்கிய அபிவிருத்தியும் குறித்த இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவும் உதவும் என்றுள்ளது.





