வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்
தற்போதைய அரசாங்கம் வடக்கின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் அதே வேளையில் நாட்டை முழுவதுமாக கட்டியெழுப்பவும் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வில் 02-09-2025 அன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்த செப்டம்பரில் நாடு முழுவதும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்யாமல், மதிப்பிடப்பட்ட தொகையை விட அதிகமாக செலவிடும் பழைய பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் சரியான நேரத்தில் நிறைவு செய்து மக்களுக்கு நன்மைகளை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
பரந்தன்- கரச்சி- முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் வாவிக்கு அருகில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தில் தினமும் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. நீண்ட காலமாக பாலம் பழுதுபார்க்கப்படாததால், மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் புதிய இருவழிப் பாலமாக இதனை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 1.4 பில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் இந்த திட்டம் 2027 செப்டம்பர் 02 ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 1.8 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க மதிப்பிடப்பட்ட இந்த திட்டம், தற்போதைய அரசாங்கத்தின் ஊழலற்ற ஆட்சியின் காரணமாக 1.4 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க குறித்த நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. . எஞ்சிய ரூ. 400 மில்லியன் வன்னி மாவட்டத்தில் பாதைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த ஆண்டு வடக்கில் பாலங்கள் மற்றும் பாதைகள் அமைப்பதற்காக 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு இந்த ஒதுக்கீடு மேலும் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தற்போதைய அரசாங்கம் வடக்கின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் அதே வேளையில் நாட்டை முழுவதுமாக கட்டியெழுப்பவும் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். அரசாங்கத்தை ஒரு கற்பனையான கண்ணோட்டத்தில் இருந்தும், முன்பிருந்த அரசாங்கங்களைப் போன்று பார்க்காமல், அதன் பணிகள் மற்றும் செயல்கள் மூலம் மதிப்பிடுமாறு அவர் மக்களை கோரினார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.