ராஜித்தவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து நீதிபதி தனுஜா லக்மாலி ஜயதுங்க உத்தரவு பிறப்பித்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தன்னை கைது செய்யத் தயாராகி வருவதால், அவ்வாறு தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனக்கு முன் பிணை அளிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து நீதிபதி தனுஜா லக்மாலி ஜயதுங்க உத்தரவு பிறப்பித்தார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இருநூறு மில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தான் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாகக்கூறி, முன்னாள் அமைச்சர் ராஜித்த இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்த்தார்.
கடந்த 14 ஆம் திகதி இம்மனுவானது கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன் பரிசீலிக்கப்பட்ட போது, நேற்று அம்மனுதொடர்பில் வாதங்களை முன் வைக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி மனு விசாரணைக்கு வந்த போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் உதவிப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டி ஆரச்சி மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
"கிரிந்த மீன்பிடி துறைமுகம், துறைமுகத்தில் நிரம்பிய மணலை அகற்றி சுத்தம் செய்து சந்தைக்கு விடுவிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த கடந்த 2012 மே 19, அன்று ஒரு திட்டத்தை கொரிய நிறுவனம் ஒன்று சமர்ப்பித்துள்ளது. அகற்றப்படும் ஒவ்வொரு கியூப் மணலுக்கும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு 300 ரூபா செலுத்தவும் நிறுவனம் அந்த ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் அப்போதைய மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்னவிடமே சமர்ப்பித்துள்ளது. அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், நிதி விதிமுறைகளின்படி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு மூலம் அங்கீகரிக்கப்படல் வேண்டும். இருப்பினும், அத்தகைய ஒப்புதலைப் பெறாமல், இந்த முன் பிணை மனுவை சமர்ப்பித்துள்ள முன்னாள் அமைச்சரின் உத்தரவின் பேரில் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனம் இதை செயல்படுத்தியுள்ளது.
மேலும், இது மணல் தொடர்பான திட்டம் என்பதால், மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற நிறுவனங்களிடமிருந்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற வேண்டும். இருப்பினும், அத்தகைய அறிக்கை எதுவும் பெறப்படவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் பெறப்படவில்லை.
இப்படித்தான் இந்தத் திட்டம் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்திய நிறுவனத்திடம் மணல் அகற்ற வசதிகள் எதுவும் இல்லை. அதன் பிறகு, அவர்கள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மணல் அகற்ற பயன்படுத்தபப்டும் "வெலிகொவ்வா" எனும் கப்பலை அவர்களிடம் பணியை மேற்கொள்ள ஒப்படைக்க வேண்டியிருந்தது.
சந்தேக நபரான ராஜித்த சேனாரத்ன தனது முன் பிணை மனுவில், கொரிய நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூரியிருப்பது இது தொடர்பிலேயே ஆகும். வெலிகொவ்வா கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு மட்டுமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இழப்பீடாக 15 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது என்றார்.