பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் 'பெய்லி' பால நிர்மாணம் ஆரம்பம்
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'பெய்லி' பால நிர்மாணப்பணிகளின் ஓரங்கமாக பரந்தன் - கரைச்சி - முல்லைத்தீவு (ஏ35) வீதியில் சேதமடைந்த பாலத்தை நீக்கி, அங்கு பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'பெய்லி' பால நிர்மாணப்பணிகளின் ஓரங்கமாக பரந்தன் - கரைச்சி - முல்லைத்தீவு (ஏ35) வீதியில் சேதமடைந்த பாலத்தை நீக்கி, அங்கு பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அதற்கமைய முதலாவதாக இலங்கைக்கு உதவிகளை வழங்கிய இந்தியா, 'ஒப்பரேஷன் சாகர் பந்து' எனும் பெயரின்கீழ் நிவாரணப்பொருட்கள், மீட்புப்பணியாளர்கள், மருத்துவ உதவிகள், கட்டுமான உதவிகள் எனத் தொடர்ச்சியாகப் பரந்துபட்ட உதவிகளை வழங்கிவருகிறது.
பேரனர்த்தத்தின் விளைவாக நாடளாவிய ரீதியில் பெருநகரங்கள், கிராமங்களை இணைக்கும் வீதிகளில் பெரும்பாலானவை பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. அதன்விளைவாகப் பெரும்பாலான இடங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான நிவாரணப்பொருட்களைத் தரைவழியாகக் கொண்டுசெல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்தம்பிதமடைந்திருக்கும் வீதிப்போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் உள்ள பகுதிகளில் 'பெய்லி பிரிட்ஜ்' எனப்படும் இரும்பிலான தற்காலிகப் பாலங்களை நிர்மாணிப்பதற்கு அவசியமான பாலத்தொகுதிகள் மற்றும் இந்திய இராணுவத்தின் பொறியியலாளர்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
அதற்கமைய இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'பெய்லி' பால நிர்மாணப்பணிகளின் ஓரங்கமாக பரந்தன் - கரைச்சி - முல்லைத்தீவு (ஏ35) வீதியில் சேதமடைந்த பாலத்தை நீக்கி, அங்கு பெய்லி பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசியமான வீதி இணைப்பை மீளுறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட மிகமுக்கியமான நகர்வாகும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.





