அரசாங்கம், எவ்வாறு அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்கும் - சந்திரகுமார்
இனப்பிரச்சினைக்கான தீர்வின் முதற்படியாக இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையே இன்னும் நடைமுறையிலும் அரசியலமைப்பிலும் உள்ளது.
மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்பதோடு, மாகாணங்களுக்கான அதிகாரத்தை முறையாக அமூலாக்கம் செய்ய வேண்டும் என்பதை ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி வலியுறுத்திவருகிறது. இதற்கான அழுத்தக் கூட்டங்களையும் விழிப்புணர்வுச் செயற்பாட்டையும் மாவட்டரீதியாக நடத்திக் கொண்டிருக்கிறோமென ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சியின் பொதுச செயலாளர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முதற்படியாக இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையே இன்னும் நடைமுறையிலும் அரசியலமைப்பிலும் உள்ளது. ஆனால், அதற்கான தேர்தலை எட்டு ஆண்டுகளாக – இரண்டு தவணைகள் – நடத்தாமல் ஆட்சியாளர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட பதவிக்கு வரும்போது மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
பதவிக்கு வருவதற்கு முன்னர் மாகாணசபைகளில் பங்கேற்ற அனுபவமும் அரசியல் உடன்பாடும் தேசிய மக்கள் சக்தியினருக்கு இருக்கின்றபோதும் தற்போது மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் தந்திரோபாயமாக இழுத்தடித்து வருகிறார்கள். தேர்தல் மூலம் தமக்கான பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை மறுதலித்து, ஒன்பது மாகாணங்களிலும் ஆளுநர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இது மக்கள் விரோத நடவடிக்கை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கண்டிக்கும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் (தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களக் கட்சிகள்) மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில் “இந்த ஆண்டு நிச்சயமாக மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறும்” என்று அரசாங்கத்தரப்பிலிருந்து அமைச்சர்கள் வாக்குறுதி அளித்துக் கொண்டிருக்கும்போது, அதை மறுதலிக்கும் விதமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மாகாணசபைகளுக்கான தேர்தல் நடப்பாண்டில் நடைபெறாது என்று அறிவித்திருக்கிறார்.
அரசாங்கத்தில் நேரடியான பங்கேற்பைக் கொண்டிருக்காத போதும் ரில்வின் சில்வாவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால், அவருடைய கூற்றே கவனத்திற் கொள்ளப்படுகிறது. எனவே ரில்வின் சில்வாவின் அறிவிப்பானது, தேசிய மக்கள் சக்தியும் ஜனாதிபதியும் பகிரங்கமாக அறிவித்த – உடன்பட்ட - ஜனநாயக அடிப்படையிலான தேர்தலையும் தெரிவையும் மறுதலிப்பதோடு, ஜனநாயக விரோத ஆட்சியை மேற்கொள்ள முயற்சிப்பதாகவே உள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, மக்களின் ஜனநாயக உரிமையை மறுதலிக்கும் உரிமையை ரில்வின் சில்வாவுக்கு வழங்கியது யார்? என்ற கேள்வியையும் எழுப்புகிறோம். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, ஆட்சி அதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி, அமைச்சர்களின் அறிவிப்பை மறுதலிக்க கூடிய அதிகாரம் ரில்வினுக்கு கிடையாது. அவர் ஒரு கட்சியின் செயலாளரே தவிர, அரசாங்கத்தின் பிரதிநிதியோ மக்களால் தெரிவு செய்ப்பட்ட உறுப்பினரோ இல்லை.
அதிகாரப் பகிர்வுக்காக இதுவரையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தலையே நடத்த தயங்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எவ்வாறு இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதற்கு மேலான அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைக்கும்? என்ற கேள்வி இங்கே எழுகிறது எனவும் தெரிவித்துள்ளார்





