சர்வதேச பெண் இராஜதந்திரிகள் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் விசேட சந்திப்பு
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், இலங்கையில் பணியாற்றும் பெண் தூதுவர்களுக்கும் இடையில் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது.
இராஜதந்திர சேவையில் உள்ள பெண்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, இலங்கையில் பணியாற்றும் பெண் தூதுவர்கள் மற்றும் பெண் இராஜதந்திரப் பணிக்குழுத் தலைவர்கள் பங்கேற்கும் விசேட சந்திப்பொன்றைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம் அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்காக பெண்கள் வழங்கிவரும் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டுவதுடன், சர்வதேச ரீதியில் தீர்மானமெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பது இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது.
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவரும் இராஜதந்திரிகள் குழுவின் தலைவருமான தேவ்வி கஸ்டினா டோபிங் கருத்துத் தெரிவித்தார். உலகின் முதலாவது பெண் பிரதமர் இலங்கையிலிருந்து உருவானமையை நினைவுகூர்ந்த அவர், இது இந்நாட்டின் பெண் தலைமைத்துவ வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும் எனத் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பதையும் அவர் பாராட்டினார்.
இதன்பின்னர், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், இலங்கையில் பணியாற்றும் பெண் தூதுவர்களுக்கும் இடையில் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. இதன்போது, பெண் தலைமைத்துவம், இராஜதந்திர சேவை, அரசியல் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பது குறித்த விடயங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இவ்விடயத்தில் எதிர்கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து இராஜதந்திரிகள் குழுவினர் பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், இக்குழுவினரை வரவேற்று சபையில் அறிவிப்பொன்றும் விடுக்கப்பட்டது. அவர்கள் சபை அமர்வுகளையும் நேரில் பார்வையிட்டனர்.





