அஸ்மானை நிச்சயமாக கொல்வோம் எனக் கூறியவாறே சிறை பூட்டை உடைத்தார்கள்: பிணையில் வந்த கைதி
நானும் மரணமடைந்த அஸ்மானும் ஒரே சிறை அறையிலேயே தங்கியிருந்தோம்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது, சிறைச்சாலை அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட முறையில் கொடூரத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் போதே கைதியான முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் பிணையில் வெளிவந்துள்ள நவோத் தில்ஷான் தெரிவித்தார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் 13-08-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நான் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் வழக்கு தொடர்பிலேயே மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தேன். அன்றிருந்து வழக்கு விசாரணை நிலுவையிலிருந்த நிலையில் கடந்த ஐந்தாம் திகதி வரை மேகசின் சிறைச்சாலையிலேயே தங்கியிருந்தேன். கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் என்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்த சகோதரன் அஸ்மான் மற்றும் அங்கிருந்த ஏனைய சகோதரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்துவதற்காகவே நான் இன்று இங்கு வந்துள்ளேன்.
சம்பவத்தன்று இரவு நாங்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் திடீரென பெரும் கூச்சலிடும் சத்தம் கேட்டது. சிறைச்சாலை அதிகாரிகளுடன் சேர்த்து பெருந்திரளானவர்கள் பெயர்களைக் கூப்பிட்டவாறே தடிகளுடனும் ஆயுதங்களுடனும் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு சிறை அறையாக எட்டிப்பார்த்து தாக்குதலுக்கு இலக்கான சம்பத், அஸ்மான் உட்பட எங்களது பெயர்களைக் கூப்பிட்டு, சிறை அறைகளின் பூட்டுகளை இரும்புத் தடிகளால் அடித்து உடைத்து எங்களை பலவந்தமாக வெளியே இழுத்தார்கள்.
நானும் மரணமடைந்த அஸ்மானும் ஒரே சிறை அறையிலேயே தங்கியிருந்தோம். அஸ்மானை நிச்சயமாகக் கொல்வோம் எனக் கூறியவாறே பூட்டை உடைத்தார்கள். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரும், சீருடை அணியாது சாதாரண உடையில் வந்த ஏனைய பல நபர்களும் தடிகளையும் இரும்புத் தடிகளையும் கொண்டு எங்களது அறைக்குள் புகுந்து எங்களை கடுமையாகத் தாக்கினார்கள். எங்களது வாட்டில் மொத்தம் 45 பேர் இருந்த நிலையில், பெயர்ப்பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டே அந்த 45 பேரையும் அழைத்து கொடூரமாகத் தாக்கினார்கள். மெகசின் சிறைச்சாலையின் பிரதான அதிகாரி புத்திக, மற்றும் இசுரு, சல்கது, ரணசிங்க போன்ற எனக்கு அடையாளம் கண்டுகொள்ள கூடிய சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மேலும் பல சிறைச்சாலை அதிகாரிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரத்தத்தை என் உடல் முழுவதும் பூசிக்கொண்டு உணர்வற்றுக் கிடப்பது போல நடித்தமையினாலேயே நான் உயிர்தப்பினேன். அவ்வாறு செய்யாதிருந்திருந்தால் நானும் அங்கே கொல்லப்பட்டிருப்பேன். எனது சொந்தக் கண்களினாலேயே நான் அதனைப் பார்த்தேன். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 20 முதல் 25 பேர் வரையிலானவர்கள் இரும்புத் தடிகளால் அஸ்மானைச் சூழ்ந்து கொடூரமாகத் தாக்கினார்கள்.
சிறைச்சாலை வார்ட்டுக்கு எதிரிலேயே நாங்கள் சுயநினைவை இழக்கும் வரை அடித்தார்கள். பின்னர் ஒவ்வொருவரையும் பிரதான வாயில் வரை தரையோடு தரையாக இழுத்துச் சென்றார்கள். நான் உடம்பில் இரத்தத்தைப் பூசிக்கொண்டு, அடிபட்டுத் தாடையும் பல்லும் உடைந்த நிலையில் வலி தாங்காது கிடப்பது போல நடித்தேன். எனது பல்லும் உடைந்து தாடையும் பலத்த காயமடைந்தது. பெயர்ப்பட்டியலில் இருந்தவர்களை அரை உயிராக்கும் வரை அடித்தவர்கள், அஸ்மானைக் கொல்வோம் எனக் கூறியவாறே அங்கே கொன்றுவிட்டார்கள்.
சிறைச்சாலை வாயில் வரை இழுத்துச் சென்ற பின்னர் அங்கே சிறைச்சாலை அத்தியட்சகர் இருந்த நிலையில், எங்களைத் தூக்கி எடுத்து மீண்டும் செல்லுக்குள் போட்டார்கள். அங்கேயும் தடிகளால் கால்களில் அடித்தார்கள். ஏனையவர்களுக்கு சுயநினைவே இருக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை அங்கு ஒன்பதுக்கும் மேற்பட்டவர்கள் தீவிர காயமடைந்திருந்தார்கள். அதன்ப பின்னர் எங்களை வாகனத்தில் ஏற்றி சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். வைத்தியசாலையிலும் கொடூரம் தொடர்ந்தது. வாகனத்திலிருந்து இறக்கும்போதே கால்களால் மிதித்தார்கள். கைவிலங்கு போடப்பட்ட நிலையிலேயே எனது முகத்திலும் மிதித்தார்கள்.
நாங்கள் புல் தரையில் விழுந்துகிடந்த போது அஸ்மான் சுயநினைவின்றி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்தேன். இன்னமும் ஏழு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மருத்துவமனையில் சிறிது நேரம் கழித்து காயங்களுக்கு மருந்திடத் தொடங்கும் போது, தீவிர காயமடைந்திருந்த அஸ்மானையோ அல்லது சம்பத்தையோ மருத்துவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. எனக்குச் சிறிய காயங்களே இருந்ததால் எனது ரத்தத்தைத் துடைத்து மருந்திட்டார்கள். ஆனால் அஸ்மானை அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
பின்னர் எங்களை ஒன்றாம் வார்ட்டில் அடைத்தார்கள். அதிகாலையில் எனக்குக் கால்களில் இரும்புத் தடியால் விழுந்த அடிகளால் வலி தாங்காது துடித்தேன். அஸ்மான், சம்பத் மற்றும் எனது நண்பர்கள் அனைவரும் வலியால் அலறிகொண்டிருந்தார்கள். அதிகாலையில் அஸ்மான் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார். ஆறு முதல் எட்டு மாதங்களாக என்னுடன் ஒரே அறையில் சாப்பிட்டு, சிரித்துப் பழகிய அஸ்மான் தண்ணீர் கேட்டது எனக்குக் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
உண்மையில் அஸ்மான்தான் எங்களது வார்ட்டின் பராமரிப்புப் பொறுப்பாளராக இருந்தார். வழக்கமாக மாலை ஐந்து மணிக்கே சிறை அறைகள் பூட்டப்படும். ஆனால், சிறை அதிகாரிகளுக்குப் பணமும் சலுகைகளும் வழங்கப்படுவதால் இரவு எட்டு மணி வரை கூட அறைகளைப் பூட்டாது திறந்திருக்க அனுமதிப்பார்கள். அதிகாரிகளுடன் நல்ல தொடர்பும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வழக்கமும் அங்கு இருந்தது. எங்களுடன் சாதாரண நாளில் சுமூகமாகப் பேசிப் பழகிய அதிகாரிகளே அன்றைய தினம் பெயர்களைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து இந்த தாக்குதலை நடத்தினார்கள்.
அஸ்மான் தண்ணீர் கேட்டபோது அவருக்குச் சேலைன் குழாய் பொருத்தப்பட்டிருந்ததே தவிர முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது உடல் நீல நிறமாக மாறியிருந்தது. சிறிது நேரத்தில் அஸ்மான் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். இப்போதும் சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள எங்களது ஏழு பேருக்கு மருத்துவமனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை மெகசின் சிறைக்குத் திரும்பக் கொண்டு செல்லாது மருத்துவமனையிலேயே வைத்துள்ளார்கள். அடுத்த கணமே என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே அவர்கள் இருக்கின்றார்கள். வேறு சிறைக்கும் மாற்ற முடியாதுள்ளதுடன் அவர்களுடன் பேசக்கூட யாருக்கும் அனுமதி இல்லை. நான் நேற்றைய தினமே பிணையில் விடுதலையானேன் என தில்ஷான் மேலும் தெரிவித்தார்.





