இரு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைத் திறக்கும் - ஜனாதிபதி அநுரகுமார
கடல் மட்டம் உயர்வு, காலநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் போன்ற விடயங்கள் இரு நாடுகளையும் பொதுவாகப் பாதிக்கிறது.
மாலைதீவு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைத் திறக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்து உபசாரம் 05-05-2026 அன்று கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால மற்றும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நெருக்கமான உறவு, ஜனாதிபதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியாரின் வருகையினால் மேலும் வலுவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தனித்துவமான அழகை ஒன்றிணைந்து ஊக்குவிக்க முடிந்தால், சுற்றுலாத்துறையின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் பெரும் வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்
இலங்கை மற்றும் மாலைதீவு மக்களுக்கிடையிலான பலமான உறவு மற்றும் கலாசாரப் பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழமையானது, இரு நாடுகளின் மொழிகளுக்கிடையே பொதுவான ஒற்றுமைகள் இருக்கின்றன.
இந்தப் பிணைப்பின் காரணமாக மாலைதீவும் இலங்கையும் எப்போதும் நெருங்கிய கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படும் நெருங்கிய நண்பர்களாக இன்று போலவே நாளையும் இருக்கும்
1965 ஆம் ஆண்டில் மாலைதீவு குடியரசின் சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடும் நிகழ்வை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்ததை பெருமையாகக் கருதுகின்றேன். அது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவின் அடையாளமாகத் திகழ்கிறது. இதன் காரணமாகவே மாலைதீவு மக்கள் இலங்கையைத் தங்களது இரண்டாவது இல்லமாகக் கருதுகின்றனர்.
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், பிராந்திய அமைதி மற்றும் செழுமைக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதில் மாலைதீவை ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் பெறுமதிமிக்க பங்காளியாகக் கருதுவதாகவும், உலகளாவிய ரீதியில் ஏற்படும் சூழல்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான தலையீடு இன்றியமையாதது.
இந்து சமுத்திர அண்டை நாடுகள் என்ற ரீதியில், இரு நாடுகளின் பொதுவான விடயங்கள் ஒன்றோடொன்று ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வு, காலநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் போன்ற விடயங்கள் இரு நாடுகளையும் பொதுவாகப் பாதிக்கிறது.
இவற்றை ஒற்றுமை மற்றும் கூட்டு இலக்குகளின் மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும். எமது நாடு பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாலைதீவு ஒரு நெருங்கிய நண்பனாக வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டுவதுடன், அதனை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புதிய வழிகளைத் திறக்கும். சகிப்புத்தன்மை, கருணை மற்றும் நிலைத்தன்மை ஆகிய நிலையான விழுமியங்களை பாதுகாத்து, இரு நாட்டு மக்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்க ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களின் வருகையானது இரு நாட்டு மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் வழிவகுக்கும் என்றார்.





