புதிய முதலீட்டுகளை கண்டறிந்து நாட்டுக்கு கொண்டு வாருங்கள் - பிரதமர் ஹரிணி
நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதில் அவர்களின் கூட்டுப் பொறுப்பு குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகக்கூடிய, புதிய முதலீட்டுகளை கண்டறிந்து நாட்டுக்கு கொண்டுவாருங்கள் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுக்குழுக்களின் தலைவர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் 26-03-2026அன்று சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள டயனி மெண்டிஸ், எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஐ.டி. பரணவிதான, ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமன் குமார சந்திரசிறி மற்றும் பாலஸ்தீனத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எம். பாரூக் எம். பௌஸர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் தேசிய நலன்களை முன்னெடுப்பதில் அவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதில் அவர்களின் கூட்டுப் பொறுப்பு குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தத்தமது நாடுகள் மற்றும் சர்வதேசத் தளங்களில் நிலையான, தொழில்முறை சார்ந்த மற்றும் மூலோபாய ரீதியான ஈடுபாடுகளின் ஊடாக, சர்வதேச ரீதியில் இலங்கையைப் பற்றிய நேர்மறையான மற்றும் நம்பகமான பிம்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகக்கூடிய, குறிப்பாகப் பேண்தகு நிலை, புத்தாக்கம் மற்றும் நீண்டகாலப் பெறுமதியினை அதிகரிக்கச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் உயரிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை இலங்கைக்குக் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு தூதுக்குழுத் தலைவர்களைப் பிரதமர் ஊக்கப்படுத்தினார்.
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் பன்முகப்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிதல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இச்சந்திப்பின்போது விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் நியமனம் பெற்ற தூதுக்குழுத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





