நீதி அமைச்சரையும் நீக்குவதற்கு அரசாங்கம் பாரிய முயற்சி: விஜேதாச ராஜபக்ஷ
கடந்த வருடத்தில் அனுமதிக்கப்பட்ட 3 சட்டங்களும் நாங்கள் தயாரித்த சட்டங்களாகும். அதனால் செயற்திறமையான ஒருவரை நீதி அமைச்சராக நியமித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.
சட்டமா அதிபரை நீக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்தின் குழுக்களாகும். சட்டமா அதிபரை நீக்குவதுடன் நீதி அமைச்சரையும் நீக்குவதற்கு அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டமா அதிபரை நீக்க வேண்டும் என தெரிவித்து ஒருசிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை சேர்ந்த அல்லது அரசாங்கத்தின் ஆதரவாளர்களாகும். தற்போதைய சட்டமா அதிபர் சுயாதீனமாக செயற்படும் ஒரு நபர். யாராவது அரசாங்கத்துக்கு தேவையான முறையில் செயற்படாமல் இருக்கும்போது அவர்களை அந்த பதவியில் இருந்து நீக்கி, அரசாங்கத்துக்கு தேவையான முறையில் செயற்டக்கூடிய ஒருவரை அந்த இடத்துக்கு நியமித்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் பிரகாரம் சட்டமா அதிபர், அரசாங்கம் தெரிவிக்கும் விடயங்களுக்கு தலை அசைக்காமல் சுயாதீனமாக செயற்படுவதால், அது அரசாங்கத்துக்கு பிரச்சினையாகும். அதனால் எப்படியாவது சட்டமா அதிபருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. சட்டமா அதிபர் அவ்வாறு பதவி நீக்குவதாக இருந்தால், பாராளுமன்றத்துக்கு பிரேரணை ஒன்றை கொண்டுவந்து, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நீக்கியது போன்ற ஒரு நடவடிக்கைக்கு செல்லவேண்டும், அவ்வாறு இல்லாமல் அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது.
அதேபோன்று நீதி அமைச்சரையும் நீக்குவதற்கு அரசாங்கத்துக்கு தேவை ஏற்பட்டிருக்கிறது. நீதி அமைச்சருக்கு எதிராக சமூகவலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசாங்கத்துக்குள் இருப்பவர்களாலே தெரிவிக்கப்படுகிறது.
தற்போதுள்ள நீதி அமைச்சர் தேவையான சட்டங்களை அமைத்து, அனுமதிக்கொள்ள முடியாமல் இருக்கிறார் என அவர்களே தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடத்தில் அனுமதிக்கப்பட்ட 3 சட்டங்களும் நாங்கள் தயாரித்த சட்டங்களாகும். அதனால் செயற்திறமையான ஒருவரை நீதி அமைச்சராக நியமித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.
அத்துடன் பல மாதங்களாக நாட்டில் கணக்காய்வாளர் ஒருவர் இல்லை. எமது நாட்டின் வரலாற்றில் கணக்காய்வாளர் ஒருவர் இல்லாமல் ஒரு நாள்கூட அரசு இருந்ததில்லை. அவ்வாறு இருக்கையில் தங்களுக்கு தேவையான, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரை கணக்காய்வாளராக நியமித்துக்கொள்ளவே அரசாங்கம் தாமதித்து வருகிறது. அவ்வாறு இல்லாமல் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் இருப்பதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.





