வடக்கு ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிலானதாகும் - சுரேஷ் பிரேமசந்திரன்
அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற பட்சத்தில், அதுகுறித்து நீதிமன்றத்தை நாடவேண்டும்.
வவுனியா மாநகரசபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபை உதவித் தவிசாளர் கிஷோர் ஆகியோர் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிலான நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. அவை சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் முற்றிலும் விரோதமானவையாகும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் 25-06-2025அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் கூறியதாவது:
வவுனியா மாநகரசபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபை உதவித் தவிசாளர் கிஷோர் ஆகியோரை வடக்கு மாகாண ஆளுநர் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதவி நீக்கியிருப்பதாகவும், அவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்புரிமையை இழந்திருப்பதாகவும் அறிவித்துள்ளார். முதலாவதாக இவர்கள் இருவரும் என்ன காரணத்துக்காகப் பதவி நீக்கப்பட்டார்கள்? இதுபற்றி ஆராய அரியரத்தினம் தலைமையில் தனியொருவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அவர் இதற்கான பரிந்துரையை முன்வைத்ததாகவும் ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் அறிவிக்கப்பட்டதா என்றால், அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறிருக்கையில் அந்தப் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அவர்களைப் பதவி இழக்கச்செய்யும் அளவுக்கு அவர்கள் பாரதூரமான குற்றங்களைப் புரிந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
காண்டீபன் தொடர்பில் ஏதோவொரு ஊழல் குற்றச்சாட்டு முதன்மைப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் வவுனியா மாநகரசபையில் ஆட்சியமைத்து வெறுமனே 3 - 4 மாதங்களுக்குள் அவர் ஊழலில் ஈடுபட்டார் எனக் கூறுவது என்னைப் பொறுத்தமட்டில் முட்டாள்த்தனமான ஒரு விடயமாகும்.
அதேபோன்று கிஷோர் உள்ளுராட்சி ஆணையாளர் அனுப்பிவைத்த சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ளாமல், அதனைக் கிழித்தெறிந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி ஆணையாளரின் சுற்றுநிருபங்களை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று கூறமுடியாது. அது மாற்றப்படக்கூடாத விடயமும் அல்ல. எனவே அந்த சுற்றுநிருபத்தில் உள்ள குறைபாடுகளை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியொருவர் சுட்டிகாட்டுகின்றபோது, அதனை மிகப்பாரதூரமான விடயமாக எடுத்து, அந்தப் பிரதிநிதிக்கு மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பறித்தெடுக்கும் அளவுக்கு ஆளுநர் செல்வது என்பது முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும்.
அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற பட்சத்தில், அதுகுறித்து நீதிமன்றத்தை நாடவேண்டும். அவர்களுடன் தொடர்புடைய தீர்மானங்களை நீதிமன்றமே மேற்கொள்ளவேண்டும். ஆனால் அதற்குப் புறம்பாக ஒரு ஆளுநருக்கு எவ்வாறு தனிப்பட்ட அதிகாரங்கள் இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. எனவே இவ்விடயத்தில் ஆளுநர் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார் என்றே நாம் கருதுகிறோம்.
அவர் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இதனைச் செய்கிறாரா? அல்லது பதவி நீக்கப்பட்ட இருவரும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களாக இருப்பதனால், அவர்களை ஆட்சி இழக்கச்செய்வதற்கான இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயங்களைப் பொறுத்தமட்டில் ஆளுநரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. அவை சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் முற்றிலும் விரோதமானவையாகும் என்றார்.





