பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உபாலி பன்னிலகே
நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-11-2025அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு- செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதையிட்டு கவலையடைகிறேன். வரவு - செலவு விவாதத்திலும் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய குற்றச்சாட்டுக்களை மாத்திரமே எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.
அடிமட்ட மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் 78 வரவு - செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தால் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடைந்திருக்கும், நாடும் அபிவிருத்தியடைந்திருக்கும்.
போலியான தற்காலிக நிவாரணமளித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரண்ட பொருளாதார கொள்கைகளை அடைவதற்காக 6 திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதை காட்டிலும் அவர்களை தொழிற்றுறையில் முன்னேற்றுவதற்கும் உரிய திட்டங்கள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகை மற்றும் நிவாரணங்களை நியாயமான முறையில் வழங்குவற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே நாங்கள் எந்த தரப்பினரையும் புறக்கணிக்கவில்லை. இந்த வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும். அரசமுறை கடன்களை முறையாக செலுத்தும் வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வோம் என்றார்.





