என்னை படுகொலை செய்ய ஒரு தரப்பினர் முயற்சி: ஜகத் விதாரன
என்னை படுகொலை செய்ய முயற்சிக்கும் நபரின் பெயரையும் பொலிஸ்மா அதிபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
        
என்னை சுட்டு படுகொலை செய்வதற்கு ஒரு தரப்பினர் முயற்சிப்பதாக கிடைத்துள்ள புலனாய்வு தகவலை பொலிஸ்மா அதிபர் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.தாமதிக்காதீர்கள் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாரன சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 24-10-2025அன்று நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வீட்டில் இருந்து வெளியேறும் போது என்னை சுட்டுக் கொல்வதற்கு ஒரு தரப்பினர் முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு பொலிஸ்மா அதிபர் களுத்துறை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை படுகொலை செய்ய முயற்சிக்கும் நபரின் பெயரையும் பொலிஸ்மா அதிபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தாமதிக்காமல் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பொலிஸ்மா அதிபர் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.எனது பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் .தாமதிக்காதீர்கள் என்றார்.





 
  
