வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் மகஜர்
போர் முடிவடைந்து 16 வருடங்களாக நீதி கோரியும் பின் இன்றுடன் 3114 நாட்கள் தொடர்ச்சியாக வீதிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்

பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முழுமையாக நிராகரிப்பதோடு, சர்வதேச குற்றவியல் விசாரணையை நாம் வலியுறுத்துகின்றோம் என்று வட,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா.பிராந்திய அலுவலகத்தில் குறித்த மகஜரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவர் யோ.கனகரஞ்சினி, செயலாளர் சி.ஜெனிதா ஆகியோர் கையளித்ததோடு அதன் பிரதிகளை செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை., ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை, மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் போனவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகிறோம். இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில், 146,679 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர், அவர்களது உறவினர்களால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் 21,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டு பலவந்தமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின்
ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமாக இலங்கையால் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது இது அவர்களின் திட்டமிட்ட இனவழிப்புக்கு கணிசமாக பங்களித்துள்ளது,
போரின் இறுதிக் கட்டத்தில், 59 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர், பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்து போராடி வருகிறோம்
59 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இலங்கை உலகில் முன்னணியில் உள்ளது. சிறுவர் உரிமைகளை நிலைநிறுத்தவும், இனப்படுகொலையை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசை திருப்திப்படுத்துவதும் கால அவகாசம் கொடுப்பதும் எமது மக்களுக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது,
போர் முடிவடைந்த பின்னர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் 350 க்கு மேற்பட்ட உறவினர்கள் நீதிக்காக போராடும் போது, தங்கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொசா புதைகுழி ஆகும் அங்கு 28 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இலங்கையில் இரண்டாவது மனிதப்புதை குழியாக தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் செம்மணி சித்துப்பத்தி இந்துமயான புதைகுழி பதிவாகியுள்ளது குழந்தைகள் உட்பட 169 பேரின் எலும்புக்கூடுகள்அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் மனிதபுதை குழியின் அகழ்வுப்பணி நிறைவடைந்த நேரத்தில் 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன. மேற்படி புதைகுழி எவையும் விசாரிக்கப்படவில்லை.
அத்துடன் எமது தாயகத்தின் ஏனைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சிங்கள இராணுவம் மற்றும் சிங்கள காடையாளர்களால் எம் உறவுகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் இடங்களும் அகழ்வுப்பணி நடைபெறவேண்டும் எனவே சர்வதேச சுயாதீன விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என ஐ நா மன்றத்தை கோருகின்றோம்.
இலங்கை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி A/HRC/60/21 இலக்கமிட்ட தங்களது அறிக்கை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சில அடிப்படை பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளது அந்த அறீக்கையில் நீங்கள் இதுவரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, குற்றவாளிகள் , தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச போர் குற்றங்களுக்கு நீண்ட காலமாக தாமதித்து வந்த நீதியையும் பொறுப்பு கூறலை உறுதிசெய்யவும் தற்போதைய ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளைமாறு இலங்கை அரசுக்கு இராஐதந்திர அடிப்படையில் நீங்கள் அழைப்புவிடுத்துள்ளீர்கள் பொறுப்புக்கூறல் தொடர்பான தங்களது மேற்படி கருத்து கடந்த 76 ஆண்டுகளாக அரசினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்தும் கட்டமைப்புசார் இனவழிப்புக்கு முகம் கொடுத்தவாறு சர்வதேச நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களாகிய எமக்கு பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருகின்ற 8ஆம் திகதி செம்டெம்பர் மாதம் தொடங்கவுள்ள ஐ நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் உரியவர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக உண்மை கண்டறியப்பட்ட பதில் விரைந்து வழங்குவதுடன் , பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் .திட்டமிட்ட இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்படுத்தி விசாரனை ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் உறுப்பு நாடுகளையும் கோருகின்றோம் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்காக சர்வதேச பொறிமுறைகளின் ஊடாகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
போர் முடிவடைந்து 16 வருடங்களாக நீதி கோரியும் பின் இன்றுடன் 3114 நாட்கள் தொடர்ச்சியாக வீதிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் எமது போராட்டத்தை இலங்கை அரசால் அடக்க முடியாது. இன்று, எங்கள் அன்புக்குரியவர்ர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தேடுவதற்கும் இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேச பொறிமுறைகள் மூலம் தேடுகின்ற எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்றுள்ளது.