இணையவழி அச்சுறுத்தல்களை அடையாளங்காண்பதற்கு விசேட கருத்திட்டம்
அரச நிறுவனங்களில் இடம்பெறுகின்ற டிஜிட்டல் மயப்படுத்தல் கருத்திட்டங்கள் மூலம் இலங்கை டிஜிட்டல் பரிமாற்றத்தை துரிதப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இணையவழி அச்சுறுத்தல்களை அடையாளங்காணல் மற்றும் தீமைபயக்கும் மென்பொருள் பகுப்பாய்வு ஆய்வு அலகொன்றை தாபிக்கும் கருத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை கருத்திட்டம், தேசிய தரவுப் பரிமாற்றத்தளம் மற்றும் இலங்கை அரசாங்க மேகக் கணணிய அமைப்பு போன்ற முக்கிய கருத்திட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இடம்பெறுகின்ற டிஜிட்டல் மயப்படுத்தல் கருத்திட்டங்கள் மூலம் இலங்கை டிஜிட்டல் பரிமாற்றத்தை துரிதப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறான கருத்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பான இணையவழித்தளங்களை உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, இணையவழி அச்சுறுத்தல்களை அடையாளங்காணல் மற்றும் அவற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய இயலுமையை அதிகரித்தல், தீமைபயக்கும் மென்பொருட்கள் பகுப்பாய்வு செய்வதற்கான இயலுமை மற்றும் மனிதவள இயலளவை அதிகரித்தல் மற்றும் இணையவழி ஆய்வுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வு அலகாக இலங்கை கணணி அவசர பதிலளிப்பு அணியில் தாபிக்கப்படுகின்ற கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச இணையவழி அச்சுறுத்தல்களை அடையாளங்காணல் மற்றும் தீமைபயக்கும் மென்பொருள் பகுப்பாய்வு ஆய்வு அலகை தாபிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.