சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் இரண்டாம் காலாண்டில் தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
இந்த ஆண்டாவது மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை பலப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் உள்ள சட்ட சிக்கலுக்கு முதல் காலாண்டுக்குள் தீர்வு கண்டால் இரண்டாம் காலாண்டளவில் தேர்தலை நடத்தலாம். இந்த ஆண்டாவது மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை பலப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தல் சட்டத்தின் காணப்படும் சிக்கல் உட்பட பல்வேறு காரணிகளால் மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளது. காணப்படும் சட்ட சிக்கலுக்கு ஆணைக்குழுவால் தீர்வு காண முடியாது. பாராளுமன்றமே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கலுக்கு பொதுக் கொள்கையின் அடிப்படையில் தீர்வு காணுங்கள் என்று அரசியல் கட்சிகளிடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். தேர்தலை விரைவாக நடத்தும் பொருட்டு பழையத் தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து வருவதாக பிரதமர் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் உள்ள சட்ட சிக்கலுக்கு முதல் காலாண்டுக்குள் தீர்வு கண்டால் இரண்டாம் காலாண்டளவில் தேர்தலை நடத்தலாம். இந்த ஆண்டாவது மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையை பலப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது ஜனநாயக விரோத செயற்பாடாகும். மக்களின் தேர்தல் உரிமைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நீதியானதும், நியாயமானதுமான வகையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.





