கரம் போர்ட் கொள்வனவு மோசடி விவகாரம் -நளின் பெர்னாண்டோவின் மனு ஒத்திவைப்பு
குறித்த மேன்முறையீட்டு மனு நேற்று (18) பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் உள்ளடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கரம் போர்ட் கொள்வனவு மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ, தமக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு கோரி, தாக்கல் செய்துள்ள மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டது.
குறித்த மேன்முறையீட்டு மனு நேற்று (18) பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் உள்ளடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மேற்படி விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட எனது சேவைபெறுநருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில் குறித்த குற்றத்துக்காகச் சட்டமா அதிபரால் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், ஒரே குற்றத்துக்காக இருமுறை வழக்குத் தாக்கல் செய்வது சட்டத்துக்கு முரணானது. இவ்விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் எனது சேவைபெறுநர் ஆட்சேபனை தெரிவித்திருந்த போதிலும், மேல் நீதிமன்றம் அவரது ஆட்சேபனையை நிராகரித்திருந்தது. ஆகையால் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சட்டத்துக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள் அமர்வு, எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் இந்த மனு தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் என உத்தரவிட்டிருந்தது. அத்தோடு அடுத்த வழக்கு விசாரணையின் போது மேற்படி கோரிக்கைத் தொடர்பில் சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை மன்றுக்குச் சமர்ப்பிக்கவுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், லங்கா சதொச நிறுவனம் ஊடாக 14 ஆயிரம் கரம் போர்டுகள் மற்றும் 11 ஆயிரம் தாயக்கட்டைகளை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 50 மில்லியன் ரூபாவுக்கு அதிக நட்டம் விளைவிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறைத்தண்டனையும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





