ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஏர்பஸ் கொள்வனவு - ஒக்டோபர் 13இல் முன்னேற்ற அறிக்கை
இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யப்பட்ட போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேற்படி வழக்கு 14-07-2026 அன்று கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை ஒன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்காக திகதி ஒன்றை வழங்குமாறும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இதன்போது, பிரபல வர்த்தகரான நிமால் பெரேரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதர முஹந்திரம்கே நீதிமன்றில் விளக்கமளிக்க அனுமதி கோரினார். எனினும், குறித்த நபர் இதுவரை இவ்வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்படாததால் அது தொடர்பில் தற்சமயம் விளக்கமளிப்பது அவசியமற்றது என நீதிவான் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை, இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
மேலும், இவ்வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பனங்களை பரீசிலித்த நீதிவான், வழக்கை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட தோடு, அன்றைய தினம் விசாரணை முன்னேற்ற அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.





