ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மர்மான முறையில் உயிரிழப்பு
இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 08-05-2026 அன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அவருக்கு வழங்கப்பட்ட பிணை, நீதிமன்றத்தினால் கடந்த 7 ஆம் திகதி இரத்து செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு பிரான்ஸின் ‘எயார்பஸ்’ நிறுவனத்திடமிருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக கபில சந்திரசேன மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. இருப்பினும், அவருக்கு பிணை வழங்க முன்வந்த இருவர் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிணையாளராக முன்னிலையான இருவரும் கபில சந்திரசேனவை யாரென்றே அறியாதவர்கள் என்பதும், தலா 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டே பிணை கையெழுத்திட்டதும் தெரியவந்தது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்த நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்து ஆஜர்ப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்திருந்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பொலிஸார் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், நேற்று காலை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மரணத்திற்கான காரணம் குறித்து கண்டறிய பிரேத பரிசோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





