சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவு; ஈரான் தூதுவர் நம்பிக்கை
மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச்சங்கம் வலுவான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வளர்க்கும் என ஈரான் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான ஈரானின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ் , மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச்சங்கம் வலுவான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வளர்க்கும் என ஈரான் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ் இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர். இதன்போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க இலங்கை – ஈரான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இங்கு உரையாற்றிய சபாநாயகர், இலங்கை மற்றும் ஈரானுக்கிடையிலான நீண்டகால உறவுகளை எடுத்துக்கட்டியதுடன், இரு தரப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தின் பிரதான பங்காளியாக ஈரான் இருப்பதாகவும்இ குறிப்பாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான நிதி ஆதரவாளராக ஈரான் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கை தேயிலை ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க ஏற்றுமதி செய்யப்படும் இடமாக ஈரான் இருப்பதாகத் தெரிவித்த அவர்,சர்வதேசத் தளங்களில் இலங்கைக்கு ஈரான் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் பாராளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் எனவும், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் எனவும் சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.
நட்புறவுச்சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் (கலாநிதி) அலிரெசா டெல்கோஷ், ஈரான் மக்களிடையே இலங்கை விசேட கௌரவத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தளங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான ஈரானின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச்சங்கம் வலுவான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை வளர்க்கும் என ஈரான் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன், விவசாயம், எண்ணெய் சுத்திகரிப்பு, கலை மற்றும் கலாசார பரிமாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்களையும் அவர் எடுத்துக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கும் நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
நட்புறவுச்சங்கத்தின் தலைவராக தன்னைத் தேர்ந்தெடுத்தமை தொடர்பில் நன்றி தெரிவித்த அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்திஇ இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் அவர் சபாநாயகருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
நன்றியுரையாற்றிய சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்,இலங்கைக்கு ஈரான் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன்,நட்புறவுச்சங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அர்பணிப்பதாகத் தெரிவித்தார்.