அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே தீர்வை வரி 30சதவீதமாக குறைக்கப்பட்டது: அமைச்சர்நளிந்த
அமெரிக்காவின் தீர்வை வரி மேலும் எத்தனை சதவீதத்தால் குறைவடையும் என்று நிதியமைச்சினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ குறிப்பிட முடியாது. பேச்சுவார்த்தையின் பிரகாரமே இறுதி தீர்மானம் எட்டப்படும்.

பரஸ்பர தீர்வை வரி விடயத்தில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே தீர்வை வரி 30சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பை அடிப்படையாகக் கொண்டு வரிக்குறைப்புக்கு இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 15-07-2025அன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத தீர்வை வரியை குறைத்துக் கொள்வதற்கு இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் 30 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே இந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 30 சதவீத தீர்வை வரியை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவுடன் தொடர்ந்து இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். பரஸ்பர தீர்வை வரியை மேலும் குறைத்துக் கொள்வற்கே எதிர்பார்த்துள்ளோம்.
அமெரிக்காவின் தீர்வை வரி மேலும் எத்தனை சதவீதத்தால் குறைவடையும் என்று நிதியமைச்சினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ குறிப்பிட முடியாது. பேச்சுவார்த்தையின் பிரகாரமே இறுதி தீர்மானம் எட்டப்படும்.
அமெரிக்காவுடன் தனிப்பட்ட தொடர்பு கொண்டுள்ளோம். ஆகவே வரி குறைப்பு தொடர்பில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று குறிப்பிடுவது முறையற்றது.
இந்த தீர்வை வரி விவகாரத்தில் அமெரிக்கா பிரத்தியேகமான கொள்கையை கடைப்பிடிக்கிறது.அந்த கொள்கையின் பிரகாரமே இராஜதந்திரமட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்றார்.