சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் விசேடகோரிக்கை
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் ஏற்படாத நபர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அங்கு அனுமதிக்கப்படுவது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே பொதுமன்னிப்பைத் தவறாகப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பட்டியலுக்குள் விழுவதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் தவிர்த்துக்கொள்ளமுடியும் என்று சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச்.அத்துல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து, அதுகுறித்து குற்றவிசாரணைப்பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்விசாரணைகளில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படாத கைதிகள், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகப் பொய்யாகக்கூறி விடுவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படாத அல்லது பொய்யான விடயங்களை முன்வைத்து பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொண்ட கைதிகள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகள் விடுபடமுடியாது. ஏனெனில் நாம் கடந்த காலங்களில் இந்த ஊழல் அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் எவ்வாறு செயற்பாட்டார்கள் என்பதைப் பார்த்திருக்கின்றோம்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் ஏற்படாத நபர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அங்கு அனுமதிக்கப்படுவது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பல இலட்சங்களை இலஞ்சமாகப் பெறும் போக்கு இப்போதும் நடைமுறையில் உள்ளது. பலத்த பாதுகாப்பு நிலவும் சிறைச்சாலைக்குள் கையடக்கத்தொலைபேசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த ஊழல் வலுவடைந்திருக்கின்றது.
2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் இவ்வாறான பல மோசடிகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பினும், அதுகுறித்து கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்குத் தவறியமையினால், இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மேலும் துணிச்சல் பெற்றுவிட்டனர்.
இதுகுறித்து நாம் பலவருடகாலமாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திவந்திருக்கின்ற போதிலும், அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமையானது இந்நிலை தொடர்வதற்கு வழிகோலியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே பொதுமன்னிப்பைத் தவறாகப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பட்டியலுக்குள் விழுவதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் தவிர்த்துக்கொள்ளமுடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





