இலங்கையில் முதல் அணுமின் நிலையத்திற்கான 5 தளங்கள்
கடந்த 4 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்கு பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 4 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்கு பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அணு உள்கட்டமைப்பு மீளாய்வு பணிக்குழு, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் மீளாய்வுகளில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிட்டது. இந்த பணிக்குழுவில் பல்கேரியா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் குறிப்பிட்டது. குறிப்பாக, உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கியுள்ளது. மேலும் 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளது.
இலங்கையின் அணுசக்தி முயற்சி முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் அணுசக்தித் திட்ட அமலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் எரிசக்தி அமைச்சு, இலங்கை அணுசக்தி அதிகாரச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை மன்றம் ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.