பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை இளம் அரசியல்வாதிகள் குழு
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த மேற்படி குழுவினருக்கு அங்குள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தினால் யாழ் கலாசார நிலையத்தில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்தது.
வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரத்தையும், அப்பிராந்தியங்களின் இயங்குகையையும் புரிந்துகொள்ளும் நோக்கில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல்வாதிகள் 16 பேர் அடங்கிய குழுவினர், நேற்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானநிலையத்தைப் பார்வையிட்டதுடன் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றனர்.
வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார இயங்குகையை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பேற்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் எனும் அரச சார்பற்ற அமைப்பின் ஏற்பாட்டில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 இளம் அரசியல் தலைவர்கள் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
'கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட்' (சகலரையும் உள்ளடக்கிய மாற்றத்துக்கான கூட்டிணைவு) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் இருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (31) புறப்பட்ட இக்குழுவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சித்ரால் பெர்னாண்டோ, அமில பிரசாத் சிறிவர்தன, சமிந்த்ரனி கிரியெல்ல, சத்துர கலபத்தி ஆகியோரும், ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் எம்.ஐ.மொஹமட் ஆத்தீஃப்பும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் காசிலிங்கம் கீத்நாத், மிலிந்த ராஜபக்ஷ, சமன்பிரிய ஹேரத் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பியன் குருகேவும், பிவிதுரு ஹெல உறுமய சார்பில் அஞ்சன உதாரவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கனிஷ்டா மைக்கேலும், சர்வ ஜன சக்தி சார்பில் ராஜித ஹப்புஆராச்சியும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் எம்.சந்திரகுமாரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஏ.ஆர்.மொஹமட் அஸ்மியும், இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் நிதன்ஷன் மற்றும் மயூரன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
வடக்கின் நிலைவரம் மற்றும் உண்மைகள் தொடர்பில் நேரடியாக அறியாத கொழும்பு அரசியல்வாதிகள் நல்லிணக்கம், காணி உரிமை, பொருளாதார உள்ளீர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேசிய ரீதியில் இடம்பெற்றுவரும் வா, பிரதிவாதங்கள் குறித்து விரிவாகப் புரிந்துகொள்வதற்குப் பங்களிப்புச் செய்வதே இவ்விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
அதன்படி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த மேற்படி குழுவினருக்கு அங்குள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தினால் யாழ் கலாசார நிலையத்தில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்தது.
அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இரா.சாணக்கியன் ஆகியோரும் இணைந்து மேற்படி அரசியல் பிரதிநிதிகள் குழுவினருக்கும் வடமாகாண மற்றும் உள்ளுராட்சிமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு உள்ளுராட்சிமன்ற நிர்வாகத்தில் நிலவும் பிரச்சினைகள், அதிகாரப்பகிர்வு, அரச சேவைகளுக்கான பிரஜைகளின் அணுகல், பொலிஸ் அராஜகம் மற்றும் கண்காணிப்பு, பிராந்திய இணைப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணம் மேற்கொண்ட அக்குழுவினர், காங்கேசன்துறை துறைமுகத்தையும் பலாலி விமானநிலையத்தையும் சென்று பார்வையிட்டனர். அதுமாத்திரமன்றி துறைமுக மற்றும் விமானநிலைய அதிகாரிகளால் அவற்றின் செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் இவ்விஜயத்தின் இறுதிய நாளான இன்று (2) யாழ் பொது நூலகத்துக்குச் சென்று பார்வையிடவுள்ள அக்குழுவினர், பல்வேறு சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளனர்.





