2027 வரை சம்பள அதிகரிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது: ஜனாதிபதி அநுர
நாட்டின் வருமானத்திற்கு ஏற்பவே செலவினங்கள் அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
போராட்டங்களுக்கு அடிபணிந்து நிதி நிலைமைக்கு மாறாகச் செயல்பட முடியாது. 2027 வரை சம்பள அதிகரிப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அல்லது மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்காகப் பணத்தை அச்சிடும் பழக்கத்தை அரசாங்கம் தொடரப்போவதில்லை. நாட்டின் வருமானத்திற்கு ஏற்பவே செலவினங்கள் அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வரம்பின்றிப் பணத்தை அச்சிடுவது அல்லது நிதி ஒதுக்கீடு செய்வது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், குறிப்பாகப் பணவீக்கத்தையும் பாதிக்கும் என்பதால், மிகவும் பொறுப்புணர்வுடன் நிதி கையாளப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், திறைசேரியினால் தாங்கிக்கொள்ளக் கூடிய அளவைத் தாண்டிக் கொடுப்பனவுகளை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தித்வா சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் இழப்பீடு வழங்கல் நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 06-02-2026 அன்றுகண்டி - குண்டசாலை மத்திய மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் பல முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று எமது தேசிய உற்பத்திக்கு நிகராக 13 சதவீத செலவுகளை மாத்திரமே எம்மால் மேற்கொள்ள முடியும். செலவுகளை அதிகரிக்க வேண்டுமெனில் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். மேலும் குறித்த 13 சதவீதத்தில் ஆகக் குறைந்தது 4 சதவீதத்தையாவது மூலதன செலவீட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
பொது சேவையில் அளவுக்கதிகமானோரை இணைத்துக் கொண்டு, சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதேவேளை அரசாங்கத்தால் பணத்தை அச்சிடவும் முடியாது. முன்னர் மத்திய வங்கியால் பணம் அச்சிடப்பட்டது. இன்று மத்திய வங்கி, திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணைமுப்பத்திரங்களின் முதன்மை ஏலதாரர் அல்ல. எனவே அரசாங்கம் கடன் பெறுவதாயின் வெளிப்புற சந்தைகளையே நாட வேண்டியுள்ளது.
தேவையான ரூபாவை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். அவ்வாறெனில் ரூபா மற்றும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இலக்கங்களில் நாம் உயர் மட்டத்திலிருக்கின்றோம். ஆனால் இலக்கங்களால் முன்னிலையிலிருப்பது மாத்திரம் போதுமானதல்ல. பொருளாதார வளர்ச்சி அத்தியாவசியமாகும். 2027ஆம் ஆண்டு வரை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்காக மாத்திரம் 33 000 கோடியாகும். இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிலரால் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்காக ஒரு புதிய சம்பளக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2025, 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் கட்டம் கட்டமாக சம்பள உயர்வு வழங்கப்படும். 2027 ஆம் ஆண்டு முழுமையான சம்பள உயர்வு வழங்கப்பட்டு முடியும் வரை, வேறு எந்த புதிய கொடுப்பனவுகளையோ அல்லது தற்போதுள்ள கொடுப்பனவுகளை அதிகரிப்பதையோ செய்ய முடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2027ஆம் ஆண்டின் பின்னர் வரவு - செலவு திட்டத்தில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் தொடர்பில் அவதானித்த பின்னரே ஏனைய கொடுப்பனவுகள் குறித்து அவதானம் செலுத்தப்படும். யார் வீதியில் இறங்கிப் போராடினாலும் அல்லது அழுத்தங்களைக் கொடுத்தாலும், திறைசேரியின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்படும். நிதிப்பற்றாக்குறை இருக்கும் நிலையில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க முடியாது. 2027ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் வரை எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய முடியாது. 2027 ஆம் ஆண்டு வரை தற்போதைய சம்பளத் திட்டத்தின் படியே அனைத்தும் நகரும். தித்வா புயலின் போது வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டாம் என்றும், இடைக்கால வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் பலராலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நாம் அதனை செய்யவில்லை. இவ்வாண்டுக்காக தயாரிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தையே நிறைவேற்றினோம்.
வரவு - செலவு திட்டத்தை மாற்றாமல், கடன் பெறாமல் இருப்பில் இருந்த நிதியைக் கொண்டு தித்வா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை பேணப்படுவதனாலேயே எம்மால் இவற்றை செய்ய முடிந்தது. இந்நாட்டில் சட்டம் காணப்படுகின்றது. அந்த சட்டத்துக்கமையவே சகல தீர்மானங்களும் எடுக்கப்படுகிறது. யாராலும் சட்டத்துக்கு அப்பால் செயற்பட முடியாது என்றார்.





