சுரேஸ் சலே இறுதி உயிலையும் எழுத தயாராகியுள்ளார் - மனைவி மனோரி
எவ்வளவு எடுத்துக் கூறியும் தனது உண்ணாவிரப் போராட்டத்தை கைவிடுவதற்குச் சம்மதிக்கவில்லை.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தீர்மானத்தில் சலே உறுதியாக உள்ளார். ஒரு துளி தண்ணீர் கூட அருந்தவில்லை. அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதால் இரு கைகளிலும் சேலைன் ஏற்றப்பட்டுள்ளது. தனது கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதோடு, இறுதி உயிலையும் எழுத தயாராகியுள்ளார் என சுரேஸ் சலேயின் மனைவி மனோரி சலே தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேயை 08-06-2026 அன்று காண்பதற்குச் சென்றிருந்த அவர், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மனோரி சலே தொடர்ந்து தெரிவிக்கையில், என் கணவரை நான் சென்று பார்த்தன் ஆனால், அருகில் செல்வதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அவர் சாப்பிடவில்லை, ஒரு துளி தண்ணீர் கூடக் அருந்தவில்லை. இதனால் அவரது உடல் கடுமையான நீர் இழப்புக்கு உள்ளாகியிருக்கலாம். அவரது இரண்டு கைகளிலும் சேலைன் ஏற்றப்பட்டிருந்ததுடன், மேலும் சில மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவ்வாறானதொரு நல்ல மனிதருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதை கண்டு மிகவும் மனவேதனையடைகிறேன். வைத்தியர்கள் தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கடுமையான மன உளைச்சலில் உள்ளதால், சிகிச்சைகள் அனைத்தையும் நிராகரித்து வந்தார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி, வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்க்குமாறு முன்னதாகக் கோரியிருந்தோம். அவரது உடல் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கிறது. இன்று காலையில்கூட அவரால் எழுந்து நிற்க முடியவில்லை .
எவ்வளவு எடுத்துக் கூறியும் தனது உண்ணாவிரப் போராட்டத்தை கைவிடுவதற்குச் சம்மதிக்கவில்லை. சாகும் வரை இந்த உண்ணாவிரதத்தைத் தொடர்வதிலேயே அவர் உறுதியாக உள்ளார். அதனால்தான், தனது கண்களைத் தானம் செய்வதற்கும், இறுதி உயிலை எழுதுவதற்கும் சட்டத்தரணியை உடனே வருமாறு அழைத்துள்ளார். தற்போது அவரது நிலைமை மிக மோசமாக உள்ளதாலேயே, அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டுள்ளார் என்றார்.





