எதிர்காலத்துக்கு பொருத்தமான கல்விமுறை அறிமுகப்படுத்துவோம்: அமைச்சர் சரோஜா
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கல்வி மறுசீரமைப்பு, சுகாதாரத்துறை மறுசீரமைப்பு மற்றும் போக்குவரத்து துறை மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான கொள்கையைக் கொண்டிருந்தது.

பாடத்திட்டங்களையன்றி எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே கல்வி மறுசீரமைப்பின் நோக்கமாகுமென அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-07-2025 அன்றுகல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கல்வி மறுசீரமைப்பு, சுகாதாரத்துறை மறுசீரமைப்பு மற்றும் போக்குவரத்து துறை மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான கொள்கையைக் கொண்டிருந்தது.
இந்த கல்வி மறுசீரமைப்பு என்பது வெறுமனே பாடத்திட்டங்களை நவீனம யப்படுத்துவதோ புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதோ பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதோ மட்டுமின்றி கல்வி முறைமையை முழுமையாக மாற்றுவதே நோக்கமாகும்.
அத்துடன் சுற்றாடல், நாட்டு மக்களின் ஒருமைப்பாடு, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் தேசிய கொள்கையுடனான தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியது. இவற்றை புதிய கொள்கை வரைபுடன் நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
அந்த வகையில் கல்வி மறுசீரமைப்பானது பாடசாலையில் மாணவர் ஒருவர் கல்வி கற்பதற்கு மேலதிகமாக எதிர்காலத்துக்கு தேவையான உலகளாவிய திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியமாகும். கல்வி மறு சீரமைப்பில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும் போது இறுதியானதும் அல்லது கடுமையான தீர்மானத்துடனுமான ஒன்றை சமூகத்தில் திணிப்பது எமது நோக்கம் அல்ல.
2031ல் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் ஒரு மாணவர் 2033 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றி இறுதியில் அவர் ஒரு சமூகப் பிரஜையாகிறார். அந்த வகையில் அடுத்த வருடத்தில் முதலாம் ஆண்டில் சேர்க்கப்படும் ஒரு மாணவர் 2035 ஆம் ஆண்டு தமது முழுமையான கல்வியை நிறைவு செய்து கொண்டு தொழில் உலகிற்குள் பிரவேசிப்பார்.
அந்த வகையில் நாம் உருவாக்கும் கல்வி மறுசீரமைப்பானது வருடாந்த தேவையை அல்லது இந்த வருடத்தின் தேவையை நிறைவு செய்வதற்கு அப்பால் இன்னும் பத்து வருடங்களுக்கு பின் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை கருத்திற் கொண்டு சேவை,தொழில் வாய்ப்பு ஆகியவற்றுக்கு பொருத்தமானதாக அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்றார்