உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியேற்பு
சட்டம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் குறித்து பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்நாட்டு சஞ்சிகைககளில் எண்ணிறைந்த கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் நடத்தியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாடு திரும்பும் வரை செயற்படும் வகையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
1802 ஆம் ஆண்டு இலங்கையின் மீயுயர் நீதிமன்றங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம், மற்றும் உயர் நீதிமன்றம் என இரண்டுக்கும் நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி தமிழராக எஸ். துரைராஜா காணப்படுகிறார். மேலும் அண்மையில் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். துரைராஜா 1988 ஆம் ஆண்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் பதிவு பெற்று 1989 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். தொடர்ந்து நீதித்துறைக்கு தரமுயர்த்தப்படுவதற்கு முன்னதாக மேலதிக மன்றாடியார் தலைமையதிபதி நிலைவரையில் பல பதவிப்படிகளை கடந்து வந்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவரது பதவிக்காலத்தில் அதிகாரமிக்கவர்கள் புரிந்த குற்றங்கள் உள்ளடங்களாக பல்வேறு உயர்மட்ட குற்றவழக்குகளில் எஸ். துரைராஜா வாதாடியுள்ளதுடன் பல விசேட வழக்காடல் குழுக்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார்.
அவர் தனது சட்டமாணிப்பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் சட்ட முதுமாணிப்பட்டத்தினை ஐக்கிய இராட்சியத்தின் லண்டன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.
பரிஸ்டராகவும் சொலிஸட்டராகவும் உள்ளீர்க்கப்பட்ட இவர் பிஜி குடியரசில் நீதியரசராகவும் பணியாற்ற நியமிக்கப்பட்டார். இலங்கை நீதித்துறையின் வரலாற்றில் அப்போதைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவளி ஜனாதிபதி சட்டத்தரணி இவராவார். அவ்வருடமே அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டில் எஸ். துரைராஜா உயர் நீதிமன்றத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார். அவருடைய நீதித்தொழிலில் பல அதிமுக்கிய தீர்மானங்கள், உள்ளடங்களாக 300க்கும் மேற்பட்ட தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார்.
நீதிமன்றங்களுக்கு அப்பால் நீதியரசர் துரைராஜா சட்டக்கல்வி மற்றும் புலமைப்பரிசில்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இலங்கை கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்வி பேரவையின் உறுப்பினராக விளங்கும் இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டபின் கற்கை மற்றும் கலாநிதி கற்கை நிகழ்ச்சித்திட்டங்களின் விரிவுரையாளராகவும் மதிப்பாய்வாளராகவும் காணப்படுகின்றார்.
சட்டம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் குறித்து பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்நாட்டு சஞ்சிகைககளில் எண்ணிறைந்த கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களையும் நடத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டமா அதிபர்கள், மற்றும் மன்றாடியார் தலைமையதிபதிகளின் மாநாட்டுக்கு இந்தியாவின் சட்டமா அதிபரின் ஊடாக இந்திய அரசாங்கத்தினால் விசேட அதிதியாக அழைக்கப்பட்ட மிக உன்னத கெளரவத்தினையும் நீதியரசர் எஸ். துரைராஜா பெற்றிருந்தார். இந்நிகழ்வில் இந்திய ஜனாதிபதியும் பிரதமரும் முறையே பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
பொதுநலவாய நாடுகளிடையே சட்டக்கல்வியின் தரத்தினை மேம்படுத்தி வளப்படுத்தும் பொதுநலவாய நாடுகளின் சட்டக்கல்வி சங்கத்தின் போஷகராகவும் நீதியரசர் காணப்படுகின்றார்.





