இந்திய விவசாயப் புரட்சி தொடர்பில் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன: எதிர்க்கட்சித் தலைவர்
விவசாய புத்தாக்கம் மற்றும் நிறுவன திறன் மேம்பாட்டுக்கு இந்தியாவின் அணுகுமுறையிலிருந்து இலங்கை பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவின் பல விவசாயப் புரட்சிகள் மற்றும் நிலையான கொள்கைகளிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. எனவே உணவுப் பாதுகாப்பை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அதன் விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதற்கும் இலங்கை நிறுவனங்களுடன் நெருக்கமாக ஒத்துழைப்புடன் பணியாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லி பூசாவில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விஜயம் செய்த போது இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் (ஆராய்ச்சி) சின்னுசாமி விஸ்வநாதன் மற்றும் நிறுவனத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
மனித மேம்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்பை பூர்த்தி செய்து கொள்வதில் விவசாயத்தின் முக்கிய வகிபாகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இதன் போது விவசாய ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விவசாயத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக முன்னேற்றம் மற்றும் விவசாயம் தேசிய மீள்தன்மையின் இதயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு நான்கு முக்கிய பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளன. உணவு கிடைத்தல், உணவுக்கான அணுகல், உணவு பயன்பாடு மற்றும் நிலைத்தன்மை எனும் இவற்றை பூர்த்தி செய்து கொள்வது பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் அதேவேளையில், பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மோதல்களைக் குறைத்துக் கொள்வதனை உறுதி செய்யும் என்றும் அவர் இங்கு தெளிவுபடுத்தினார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் சுமார் 16 சதவீத பங்களிப்பைப் பெற்றுத் தரும் அதேவேளை, இலங்கையில், சுமார் 8 சதவீத பங்களிப்பையே பெற்றுத் தருகிறது என்று ஒப்பீட்டு புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தியிருந்தார்.
எனவே, இந்தியாவின் பல விவசாயப் புரட்சிகள் மற்றும் நிலையான கொள்கைகளிலிருந்து இலங்கை கற்றுக்கொள்வதற்கு பல பாடங்கள் காணப்படுகின்றன என்றும், இந்தியா தனது தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் விவசாயத்திற்கு முன்னுரிமையளித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய புத்தாக்கம் மற்றும் நிறுவன திறன் மேம்பாட்டுக்கு இந்தியாவின் அணுகுமுறையிலிருந்து இலங்கை பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். உணவுப் பாதுகாப்பை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அதன் விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதற்கும் இலங்கை நிறுவனங்களுடன் நெருக்கமாக ஒத்துழைப்புடன் பணியாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, துறைசார் இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இறுதியாக, ஆராய்ச்சி கூட்டாண்மைகள், அறிவு பரிமாற்றம், ஆரம்ப முன் பதிவு, துல்லிய வேளாண்மை, காலநிலை மாதிரியாக்கம், உரத்தின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியமான பல பரப்புகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கலந்துரையாடல் தனக்கு பெறுமதியான தெளிவைப் பெற்றுத் தந்தது என்றும், இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைகளுக்காக இலங்கை மற்றும் இந்தியா, விவசாய புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





