தமிழ், முஸ்லிம் இணைவு எம்மை நாமே ஆளக்கூடிய நிலையை உருவாக்கும்: சுமந்திரன்
அஷ்ரப் பெரும்பான்மை சமூகத்தினரோடு பேரம் பேசுவது குறித்து பல பாடங்களை எங்களுக்குப் புகட்டிச் சென்றிருக்கிறார்.
தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் 09-16-2025 இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நினைவுப் பேருரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 20 ஆவது நினைவு தினப் பேருரையை 2020ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நிகழ்த்தியிருந்தேன். அன்னாரது 25ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவுப் பேருரை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த ரவூப் ஹக்கீமுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் இன்னமும் பரஸ்பர சந்தேகங்களும் நெருடல்களும் தொடர்ந்தும் நிலவி வருகிற காலத்தில் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது தடவையாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எனக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பை பெரும் கௌரவமாகவே நான் கருதுகிறேன். புட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளும் எமது சமூகங்களின் உறவு என்றுமில்லாதவாறு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆகையால், அந்த தலைப்பிலேயே இந்த நினைவுப் பேருரையை ஆற்றலாம் என்று எண்ணினேன். அதுவே பெருந் தலைவர் அஷ்ரபுக்குச் செய்யும் உயரிய அஞ்சலியாகவும் கருதுகிறேன்.
உலகெங்கும் மொழி என்பதே அரசியல் ஆட்புலங்களை நிர்ணயம் செய்கிறது என்பது புலப்படும். உலக வரைபடத்தில் நாடுகளின் அரசியல் எல்லைகளை அவதானித்தால் இது தெளிவாகத் தெரியும். ஐரோப்பா இதற்கு நல்ல உதாரணம். தாய்மொழி அடிப்படையிலேயே சகல நாடுகளும் பிரிந்திருக்கின்றன. தனித்தனி நாடுகளாகப் பிரியாவிட்டாலும் சுவிட்ஸ்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் சமஷ்டி அலகுகள் மொழி அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளன.
எமது அண்டை நாடான இந்தியாவிலும் மொழிவாரியான மாநிலங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சி அலகுகள் அமைந்துள்ளன. இதற்கான காரணத்தை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். சமுக வாழ்விற்கு மொழி இன்றியமையாதது. ஒரு மொழி இல்லாமல் ஓர் அரசியல் அலகாக இயங்க முடியாது.
மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி சம்பாஷித்து கலந்துரையாடி தங்களைத் தாங்களே ஆள்வதையே ஜனநாயகம் என்கிறோம். இதைச் செய்வதற்கு மொழி இன்றியமையாதது. மொழிபெயர்ப்போடு செய்யப்படும் கலந்துரையாடலையும் ஒரே மொழியில் நிகழும் சம்பாஷனையையும் ஒப்பிட முடியாது. அதுவும் ஆட்சி அதிகார விடயங்களில் மொழிபெயர்ப்பில் தங்கியிருப்பது ஆபத்தில் கூட முடியலாம். இலங்கை நாட்டில் இரண்டு தாய்மொழிகள் வழக்கத்தில் உள்ளன. ஆகவே, அரசியல் அலகுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்தப் பிரதான பிரிவு முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டாவது தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த நாட்டிலே எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள். தமிழ் - முஸ்லிம் என்ற இரு சமுகங்களைச் சேர்த்துக் கணக்கிட்டாலும் பெரும்பான்மை சமூகத்தவர் எம்மை விட எண்ணிக்கையில் மூன்று மடங்கானவர்கள். அப்படியானதொரு சூழ்நிலையில் நாம் கூடியவரை சேர்ந்து இயங்குவதுதான் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களுக்கும் பாதுகாப்பானது. அப்படியாக நாம் சேர்ந்து இயங்கும்போது எமக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் மதித்து அவற்றையும் எமது தனியான அடையாளங்களையும் ஏற்றுக் கொண்டு இயங்க வேண்டும்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இந்த நாட்டின் ஆட்சி முறை சமஷ்டியாக மாற்றப்பட வேண்டுமென்று கோரி தனிக் கட்சியாக உருவெடுத்த போதே ஒரு சுயாட்சி தமிழ் அரசும் ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவ வேண்டும் என்று இரண்டு அலகுகளாக எமது கட்சி யாப்பில் நோக்கம் என்ற தலைப்பின் கீழ் விதி 2 இலேயே கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் தர்மலிங்கத்தின் நினைவு நாளில் நான் கூறியபடி 1971ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் எமது கட்சியின் மாதிரி அரசியல் யாப்பை முன் வைத்த போதும், இதே எண்ணத்தின் அடிப்படையிலே ஐந்து சமஷ்டி அலகுகளாக நாடு பிரிக்கப்பட வேண்டும் என்றும் வட, வட கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம், தென்கிழக்கு பிரதேசங்களைக் கொண்ட மாநிலம் என்றும் இருந்ததை நான் நினைவுபடுத்தியிருந்தேன்.
அஷ்ரப், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளிலே அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டாலும் தம்பி அஷ்ரப் அதைப் பெற்றுத் தருவான் என்று முழங்கியது எவரும் அறிந்ததே. ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்தியபோது அவர் அந்த ஜனநாயகத் தீர்ப்பை ஏற்று பயணிக்க ஆரம்பித்தார்.
அஷ்ரப் பெரும்பான்மை சமூகத்தினரோடு பேரம் பேசுவது குறித்து பல பாடங்களை எங்களுக்குப் புகட்டிச் சென்றிருக்கிறார். இது விசேடமாக தமிழ் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்றாகும், எதிர்காலத்தில் தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும்.
அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இதற்கு பெருந்தலைவர் அஷ்ரபினதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினதும் தீர்க்கதரிசனமான கடந்தகால செயற்பாடுகள் எமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன. அந்த முன் மாதிரிகளை பின்பற்றினாலேயே தமிழ் - முஸ்லிம் உறவின் மூலமாக எமது இரண்டு சமூகங்களினதும் இருப்பை நாம் உறுதி செய்வது மட்டுமன்றி, எம்மை நாமே ஆளக்கூடிய ஆட்சி முறையை இந்த நாட்டுக்குள்ளேயே ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.





