பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மிக முக்கியம் - பிரதி அமைச்சர் அருண்
பிராந்திய மட்டத்திலான ஆக்கபூர்வமான பங்களிப்பிற்காக இலங்கை எப்போதும் தயாராகவே உள்ளது.
நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் நடைபெற்ற 7ஆவது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
'அண்டை நாடுகளுடன் இணைந்த எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பிராந்திய ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை, அமைதியான இணை வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சி ஆகியவற்றிற்கான இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நான் இந்த இடத்தில் மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன். பிராந்தியம் முழுவதும் நிலையான வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த அண்டை நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் மிக இன்றியமையாததாகும்.
பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கலாசார பரிமாற்றங்கள், வர்த்தக உறவுகள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இலங்கை–சீனா உறவானது காலத்தால் சோதிக்கப்பட்ட ஒரு நீண்டகால நட்புறவாகும். இந்த வலுவான கூட்டாண்மை இலங்கையின் சமூக–பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், நாட்டின் வெளிநாட்டு உறவுகளின் முக்கிய தூணாகவும் தொடர்ந்தும் விளங்கி வருகின்றது.
இலங்கையினுள் நிலையான, வெளிப்படையான, முதலீட்டாளர் நட்பு மற்றும் உலகத்துடன் தீவிரமாக இணைந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக தற்போதைய இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றது. நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டும் நோக்கில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, டிஜிட்டல் மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விவசாயம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எமது அரசு தற்பொழுது அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய புவியியல் அமைவிடமானது, தெற்காசியா, கிழக்காசியா மற்றும் உலக வர்த்தக சந்தைகளுக்கு இடையிலான ஒரு முக்கிய இணைப்பு மையமாக செயல்படும் ஆற்றலை இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதேவேளை, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவுடனான சீனாவின் தொடர்புகளுக்கான நுழைவாயிலாக யுன்னான் மாகாணம் வகிக்கும் முக்கியத்துவத்தையும் நாங்கள் மதிக்கின்றோம். இதனால் சுற்றுலா, கல்வி, விவசாயம், தேயிலைத் தொழில், இரத்தினத் தொழில், சுகாதார சேவைகள், வர்த்தகம், போக்குவரத்து, புத்தாக்கங்கள் மற்றும் கலாசார பரிமாற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளில் யுன்னான் மாகாணத்துடன் தமக்கான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள இலங்கை மிகுந்த ஆர்வமாக உள்ளது.
மேலும், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், இளைஞர்களின் பங்கேற்பு, கல்விப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு , காலநிலை மாற்றத்திற்கான தழுவல், பேரிடர் அபாய குறைப்பு மற்றும் அமைதியான, வளமான பிராந்திய எதிர்காலத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பிராந்திய மட்டத்திலான ஆக்கபூர்வமான பங்களிப்பிற்காக இலங்கை எப்போதும் தயாராகவே உள்ளது. சீனா, தெற்காசிய கூட்டாளிகள் மற்றும் பல்தரப்பு தளங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, எமது பகிரப்பட்ட இலக்குகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல இலங்கை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. நாடுகள் ஒன்றிணைந்து வளர்ச்சியடையும், மக்கள் ஒன்றிணைந்து செழிப்பை அடைந்து முழுப் பிராந்தியமும் ஒன்றாக முன்னேறும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே எமது இறுதி நோக்கமாகும் என்றார்.





