தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை புதிய அரசியலமைப்பில் உள்வாங்குங்கள்: ஜ.த.தே. கூ. பேராளர் மாநாட்டில் தீர்மானம்
இலங்கையர் என்பதே ஆட்சியின் அடிப்படை என உரத்துக் கூறும் அரசாங்கம் கல்முனையில் தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதியை இல்லாது செய்ய உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்பது உட்பட தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு, நீதி கோரல் மற்றும் வாழ்வியல், வாழ்வாதார பிரச்சினைகளை மையப்படுத்திய 15தீர்மானங்களை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பேராளர் மாநாட்டில் நிறைவேற்றியுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடானது 22-02-2026 அன்று சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சந்திரகுமார் மற்றும் வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
குறித்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
01அரசாங்கம் கொண்டுவர விரும்பும் புதிய அரசியல் சாசனமானது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழ்விடப் பிரதேசத்தில் ஒரு சுயாட்சியை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் சமஷ்டி அரசியல் அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.
02 இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணசபை முறையின் கீழ் நடத்தப்பட வேண்டிய மாகாணசபைத் தேர்தல்கள் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நடத்தப்படவில்லை. ஆகவே மிக விரைவாக முன்னைய விகிதாசார முறைப்படி தேர்தல்களை நடத்தி மாகாண நிர்வாகங்களை மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03 நாற்பத்தாறு வருடங்களுக்கு முன்பாக தற்காலிக ஏற்பாடாக நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுமென தற்போதைய ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு உறுதி வழங்கியிருந்தார். ஆனாலும். தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக அதைவிட மோசமான, அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனைத்து மனித உரிமை அமைப்புகளும் கண்டிக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனவும், அதற்குப் பிரதியீடாக எவ்வித சட்டமும் இந் நாட்டுக்கு தேவையில்லை.
04 இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்வதேச நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு பரிகார நீதி வழங்கப்படுவதுடன். இன அழிப்புச் செயற்பாடுகளின் மீள்நிகழாமையை உறுதி செய்ய வேண்டும்.
05 தவிர்க்க முடியாத சூழலில் முன்பு ஆயுதம் ஏந்தினோம் எனக்கூறும் ஒருவரை செயலாளராக கொண்டுள்ள கட்சி சார்ந்த தற்போதைய ஆட்சித்தலைவர் தமிழ் இளைஞர்களின் நிலையினைப் புரிந்துகொண்டு அவர்கள் தமது எஞ்சிய காலத்தினையாவது அமைதியும் சமாதானமும் நிறைந்த சூழலில் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி வழங்கப்பட வேண்டும்.
07 இந்திய இழுவை மடிப்படகுகளாலும், உள்ளுர் இழுவை மடித் தொழிலாலும், சட்டவிரோதமான மீன்பிடி முறைகளாலும், மீனவக் கிராமங்களில் படைத்தரப்புகள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளாலும் கடல் மீதான உரிமையை இழந்தும், கடல் வளங்களை இழந்தும், தமது வாழ்வாதாரங்களை இழந்தும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் 46,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
08விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பியுள்ள பெருமளவு மக்களின் நலன்களை பேனும் வகையில் ஏறக்குறைய எட்டு இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் முப்பது இலட்சம் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுவதால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் முழு நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் முழுமையான நிதியை உரிய நிறுவனங்களுக்கு விடுவிக்க வேண்டும்
09வடக்கு மாகாணத்திற்கு மகாவலி நதி நீர் வரக்கூடியளவிற்கு வாய்ப்புகள் இல்லை என்பதை மகாவலி அபிவிருத்திச் சபையின் உத்தியோகத்தர்கள் 'மங்கள முனசிங்கவின் தெரிவுக்குழுவில்' பல வருடங்களுக்கு முன்பாகவே தெளிவாக எடுத்துக் கூறியுள்ள நிலையில் வவுனியா வடக்குப் பிரதேசத்தில் குடிப்பரம்பலை மாற்றும் நோக்குடன் மாவட்டத்திற்கு வேளியே இருக்கும் சிங்கள ஊர்கள் தன்னிச்சையாக அரச நிர்வாகத்தால் இணைக்கப்படுகின்றன. இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களின் நீர்த் தேவையெனக் கூறி, தமிழ் மக்களின் கிராமங்களையும். வயல் நிலங்களையும் மூழ்கடிக்கக்கூடிய 'கிவுல் ஓயா' திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்
11 - தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கில் தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம். வனஜீவராசிகள் திணக்களம் மற்றும் கனிய மணல் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் மூலமாகவும் ஏராளமான தமிழர் பயன்பாட்டு நிலங்கள் பறித்தெடுக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்படுவதோடு சட்டவிரோதமான முறையிலான பௌத்த கட்டுமானங்கள் அனைத்தையும் இடைநிறுத்தி அவை தொடர்பாக ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
12 மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் சிங்கள பௌத்தமயமாக்கலும் நிலப்பறிப்பும் தொடர்கிறது. 3000 ற்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் உள்ள மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும், விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இவ் விடயத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளும் மீறப்படுகின்றன. ஆகவே அம்வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
13 அம்பாறை மாவட்டத்தில், கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு அங்குள்ள தமிழ்மக்கள் நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இலங்கையர் என்பதே ஆட்சியின் அடிப்படை என உரத்துக் கூறும் அரசாங்கம் கல்முனையில் தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதியை இல்லாது செய்ய உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
14 'பிரஜா சக்தி' எனும் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் கட்சி உறுப்பினர் ஒருவரை முழு அதிகாரத்துடன் அரசாங்கம் நியமித்து வருகின்றது. கட்சி உறுப்பினர் ஒருவரை முழு அதிகாரங்களை வழங்கி நியமனம் செய்வதும் அதற்கான குழு ஒன்றை அமைப்பதும் முற்றிலும் ஜனநாயக விரோத செயற்பாடாகும். எனவே பிரஜா சக்தி எனும் ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத திட்டத்தை கைவிட வேண்டும்.
15 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நிர்வாக ரீதியாகவோ மாகாணசபை அரசியலமைப்பு ரீதியாகவோ நேரடிச் சம்பந்தமில்லாத நிர்வாகத்திற்குள். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கி கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளுராட்சி ஆகிய துறைகளில் பொறுப்புகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுனர் அண்மையில் சட்ட விரோதமாக மேற்கொண்டுள்ளார். மாகாணசபை நிர்வாகத்தை சிறுமைப்படுத்தும் இந் நடவடிக்கையை ஆளுனர் அவர்கள் உடனடியாக கைவிடவேண்டும் என்பன அவையாகும்.





