'கிரிஷ்' குழும ஒப்பந்த வழக்கு - இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை
குறிப்பிட்ட அந்த இரண்டு சாட்சிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான 'கிரிஷ்' குழும ஒப்பந்த வழக்கு தொடர்பாக, இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுப்பதற்காக நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த இரண்டு சாட்சிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, வெளிநாட்டு சாட்சிகளுக்கான முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அழைப்பாணைகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட அறிவுறுத்தினார்.
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' குழும ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை, எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது. முன்னதாக, இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் 'கிரிஷ்' குழுமத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்றதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் (குற்றம் இழைத்துள்ளதாக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





