மலேசியாவில் கைதான கஞ்சிபாணை இம்ரானின் சகா ‘ரத்மலானே சைமா’ உள்ளிட்ட மூவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
இம்ரான் மற்றும் ஏனைய நபர்கள் தங்கியிருந்த இடங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த பல இடங்களை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரின் உதவியுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தலைமையிலான அதிகாரிகள் குழுவினரால் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் என அறியப்படும் கஞ்சிபாணை இம்ரானின் தரப்பை சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான தனுஷ்க கௌசல்ய எனும் இரத்மலானை குடு சைமா உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
கைது நடவடிக்கையை தொடர்ந்து மலேசிய பொலிஸார் சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்றைய தினம் சந்தேகநபர்களை அழைத்துவருவதுக்காக நாட்டிலிருந்து மலேசியா பயணித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்படி சந்தேகநபர்களுடன்10-08-2026 அன்று பிற்பகல் 4.28 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யுஎல்-315 எனும் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்திருந்தனர்.
கஞ்சிபாணை இம்ரான் மற்றும் அவருடன் நெறுங்கிய தொடர்புடைய நபர்கள் மலேசியாவில் மறைந்திருப்பதாக விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்றிருந்த தகவல்களுக்கமைய, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தலைமையிலான இலங்கையை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் மலேசியாவுக்கு சென்று அந்நாட்டு பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட இரகசிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது இம்ரான் மற்றும் ஏனைய நபர்கள் தங்கியிருந்த இடங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த பல இடங்களை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
நீண்டகாலமாக பிரான்ஸில் தலைமறைவாக இருக்கும் "குடு அஞ்சு" என்பவரின் நெருங்கிய சகாவாகச் செயற்பட்ட சைமாவை, படுகொலை செய்ய குடு அஞ்சு திட்டமிட்டிருந்ததாகவும், அது தொடர்பில் கஞ்சிபாணை இம்ரான் எச்சரித்ததைத் தொடர்ந்தே சைமா கஞ்சிபாணை இம்ரானுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பே மலேசியாவிற்குத் தப்பிச்சென்றுள்ள ரத்மலானே சைமா உள்ளிட்ட இச்சந்தேகநபர்களுக்கு எதிராகப் படுகொலைகள் மற்றும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.





