மழையுடனான சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1616 பாதிப்பு
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 458 குடும்பங்களைச் சேர்ந்த 1616 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்சரிவு மற்றும் சிறு வெள்ளப்பெருக்கு ஆகிய அனர்த்தங்களினால் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில்,94 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வங்காளக் கடலில் அந்தமான் கடல் பிராந்தியத்தில், தீவின் வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழையுடனான காலநிலை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல்,மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற (ஆரம்பநிலை) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், காலி மாவட்டத்தில் நெலுவ,களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட,கண்டி மாவட்டத்தில் பஸ்பாககொறளை,கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட, அரநாயக்க, தெரனியாகல, மாவனெல்ல,யட்டியந்தோட்டை,நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை- மேல், கொத்மலை –கிழக்கு, அம்பகமுவ, நோர்வூட், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுகங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஆற்றுப்படுக்கை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை இன்று பகல் 01 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரதான நீர்நிலைகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதால் பொல்பிட்டி நீர்த்தேக்கத்தின் 01 வான்கதவும், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 03 வான்கதவுகளும், குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் 01 வான்கதவும் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.
வங்காள கடலில் அந்தமான் கடல் பிராந்தியத்தில், தீவின் வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தாழ்வு மண்டல வலுவாக்கத்தினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாத நிலையில் தீவை நோக்கி வீசும் காற்றுக் காரணமாகத் தீவின் தென்மேற்குப் பகுதியில் தற்பொழுது காணப்படும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.





